
பாடாங் பெசார், ஏப்ரல்-17, மலேசிய பெர்லிஸ் பல்கலைக்கழகமான UniMAP-மின் பாடாங் பெசார், கம்போங் சுங்கை ச்சுச்சு campus வளாகத்தில் 2 வாரங்களாக தண்ணீர் பிரச்னை பூதாகரமான வெடித்துள்ளது.
பக்கத்தில் ஒரு மேம்பாட்டுத் திட்டம் மேற்கொள்ளப்படுவதாலும், தண்ணீர் குழாய் உடைந்ததுமே இந்த குடிநீர் தட்டுப்பாட்டுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
பொறுமையிழந்த மாணவர்கள் நேற்று முந்தினம் இரவு அமைதி மறியலில் இறங்கினர்.
பெண்கள் தங்கும் விடுதியில் ஏராளமான மாணவிகள் ஒன்று கூடி ‘தண்ணீர், தண்ணீர், தண்ணீர்’ என முழக்கமிட்டனர்; “நாங்கள் வீட்டுக்கே போகிறோம்” என்ற முழக்கங்களையும் கேட்க முடிந்தது.
இந்நிலையில், அங்கு பயிலும் இந்திய மாணவர்களை வணக்கம் மலேசியா சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்தது.
தண்ணீர் விநியோகம் இல்லாத காரணத்தால், தங்களின் அன்றாட வாழ்க்கை பெரும் பாதிப்படைந்திருப்பதாக, கோஹிலன் ராஜன் கூறினார்.
மாற்று ஏற்பாடாக பீப்பாய்களில் தண்ணீர் விநியோகம் கொடுக்கப்படுகிறது; அத்தண்ணீரை குடிப்பதற்கும் சமைப்பதற்கும் பயன்படுத்த வேண்டாம், குளிப்பதற்கு மட்டும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், அந்தப் பீப்பாய் தண்ணீர் சுத்தமாக இல்லையென்பது மாணவர்களின் புகாராகும்.
என்றாலும், குடிப்பதற்கு mineral water எனப்படும் கனிம நீரும், உணவுப் பொருட்களும் தங்கும் விடுதி நிர்வாகத்தால் வழங்கப்படுவதாக கோஹிலன் கூறினார்.
கூடிய விரைவில் பிரச்னைத் தீர்ந்து விடும் என சொல்கிறார்களே தவிர, உறுதியாக எப்போது விடிவு பிறக்குமென யாரும் சொல்வதில்லை என அவர் குறைப்பட்டுக் கொண்டார்.
இவ்வேளையில், தண்ணீர் பிரச்னையோடு கடந்த சில நாட்களாக மின்சார விநியோகமும் அவ்வப்போது தடைப்பட்டிருப்பதாக, ஜோகூரிலிருந்து வந்து படிக்கும் கெஷிகா முருகன் கூறினார்.
இந்த 2 வாரங்களாக விட்டு விட்டு தண்ணீர் வருவதும், அப்படியே வந்தாலும் அழுக்காக இருந்ததால், மாணவர்களுக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டது.
இதனால் மாணவர்களால் படிப்பில் உரிய கவனம் செலுத்த முடியாமல் போனதாக கெஷிகா சொன்னார்.
நேற்று முதல் தண்ணீர் விநியோகம் திரும்பியுள்ளது; ஆனால் இது நிரந்தர தீர்வா என தெரியவில்லை என்றார் அவர்.
இந்த தண்ணீர் பிரச்னையைச் சமாளிக்க ஏதுவாக, போதனைகள் தற்காலிகமாக இயங்கலை வகுப்புக்கு மாற்றப்படுவது, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு புளோக் கட்டடங்களுக்கும் டாங்கி மூலமாக தண்ணீர் விநியோகம் செய்வது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை பல்கலைக் கழக நிர்வாகம் எடுத்துள்ளது.
மசூதிக்கும் மற்ற வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்ல மாணவர்களுக்கு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்தத் தண்ணீர் பிரச்னை விரைவில் தீர்க்கப்பட்டு, மாணவர்களின் இயல்பு வாழ்க்கைத் திரும்புதற்குண்டான உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுமென நிர்வாகம் உறுதியளித்தது