
கங்கார், ஏப்ரல்-23, மருத்துவ உதவியாளராக ஆள்மாறாட்டம் செய்ததாக 23 வயது இளைஞருக்கு எதிராக பெர்லிஸில் உள்ள ஓர் அரசாங்க மருத்துவமனை போலீஸில் புகார் செய்துள்ளது.
முழுமையான சீருடை அணிந்து, மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பையை வைத்திருந்த அந்நபர், ஏப்ரல் 8-ஆம் தேதி இரவு, கங்கார், துவாங்கு ஃபாவ்சியா மருத்துவமனையில் கையும் களவுமாகப் பிடிபட்டார்.
இணையம் வாயிலாக அச்சீருடைகளையும் உபகரணங்களையும் வாங்கியதை அவர் ஒப்புக் கொண்டார்.
மருத்துவ உதவியாளராக வேண்டுமென்பது நீண்ட நாள் ஆசையென்பதால் தாம் அவ்வாறு செய்ததாக அவ்விளைஞர் கூறியுள்ளார்.
இதையடுத்து குற்றவியல் சட்டத்தின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுவதாக, கங்கார் போலீஸ் கூறியது.
இதனிடையே, இதுபோன்ற அத்துமீறல் சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருக்க, பாதுகாப்பு கண்காணிப்புகளை பலப்படுத்துமாறு அம்மருத்துவமனை நிர்வாகத்திற்கு பெர்லிஸ் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
அரசாங்க அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்வது சட்டப்படி குற்றமென்பதையும் பொது மக்களுக்கு அத்துறை நினைவுறுத்தியது