
கோலாலம்பூர், ஏப்ரல் 24 – கோத்தா டாமன்சாராவைச் சுற்றியுள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில், வாடிக்கையாளர் உபசரிப்பு பணியாளர்களாக பணிபுரிந்ததாக சந்தேகிக்கப்படும் மொத்தம் 29 வெளிநாட்டுப் பெண்களும், மூன்று வங்காளதேச ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.
இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்த நடவடிக்கை, சட்டப்பூர்வ அனுமதியின்றி வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியதாக சந்தேகிக்கப்படும் பொழுதுபோக்கு வளாகங்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டதாக சிலாங்கூர் குடிநுழைவு இயக்குநர் கைருல் அமினுஸ் கமாருடின் ( Khairul Aminus Kamaruddin ) தெரிவித்தார்.
மொத்தம் 44 நபர்கள் சோதனை செய்யப்பட்டனர், அவர்களில் 32 பேர் பல்வேறு குடிநுழைவு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டனர்.கைது செய்யப்பட்டவர்களில் 21 முதல் 40 வயதுக்குட்பட்ட 29 தாய்லாந்து பெண்கள், ஒரு லாவோஸ் பெண் மற்றும் மூன்று வங்காளதேச ஆண்களும் அடங்குவர். இந்த சோதனையின்போது வங்கதேசத் தொழிலாளர்கள் தப்பிச் செல்ல முயன்றனர், ஆனால் அவர்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டனர் என்று கைருல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் அந்த வளாகத்தில் இருந்த ஏழு நபர்கள் சாட்சியம் அளிப்பதற்கு ஆஜராகுவதற்காக ஏழு சம்மன்களும் விநியோகிக்கப்பட்டன. பயண ஆவணங்கள் இல்லாதது, அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மேல தங்கியிருந்தது உடபட குடிநுழைவு சட்டங்களை மீறிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட அனைவரும் செமினி குடிநுழைவு தடுப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உதவ 14 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கைருல் கூறினார்.