
வாஷிங்டன், மே-5- வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் அனைத்துத் திரைப்படங்களுக்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் 100 விழுக்காடு வரியை விதித்துள்ளார்.
அழிந்து வரும் உள்ளூர் திரைப்படத் துறையைக் காப்பாற்றும் நடவடிக்கையாக அது அமைவதாக, டிரம்ப்பின் சமூக ஊடகத் தளமான Truth Social-லில் தெரிவிக்கப்பட்டது.
வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் மற்றும் அமெரிக்காவுக்குள் நுழையும் அனைத்துத் திரைப் படங்களுக்கும் அந்த 100 விழுக்காடு வரியை விதிப்பதை விரைவுப்படுத்துமாறு, வர்த்தகத் துறை மற்றும் அமெரிக்க வாணிப பிரதிநிதிகளை அவர் உத்தரவிட்டார்.
ஹோலிவூட்டும் இதர பல்வேறு துறைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன; இது வெளிநாடுகளின் திட்டமிட்ட சதி என டிரம்ப் கூறிக் கொண்டார்.
அதாவது தங்கள் நாடுகளில் படப்பிடிப்புகளை நடத்த அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு வெளிநாடுகள் பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன.
இதனால் உள்நாட்டில் திரைப்படத் துறை நலிவடைகிறது; இது அமெரிக்க தேசியப் பாதுகாப்புக்கு மிரட்டல் என அவர் சொன்னார்.
பரஸ்பர வரி என்ற பெயரில் சீனா மற்றும் தனது நேரெதிர் போட்டியாளர்களுக்குக் குடைச்சல் கொடுத்து வந்த டிரம்ப், திடீரென சினிமாத் துறையில் ‘கை வைத்திருப்பது’ ஒட்டுமொத்த உலகத் திரைத்துறையினரை அதிர வைத்துள்ளது.
என்றாலும், திரையரங்குகளில் காட்டப்படும் திரைப்படங்களைப் போலவே, streaming சேவைகளில் வரும் திரைப்படங்களுக்கும் இவ்வரி பொருந்துமா?
அல்லது தயாரிப்பு செலவுகள் அல்லது பாக்ஸ் ஆபிஸ் வசூலின் அடிப்படையில் கணக்கிடப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.