
ஜம்ஷட்பூர், மே-25 – இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் ஓர் ஆடவர் தனது மனைவி மற்றும் 2 பெண் பிள்ளைகளோடு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனக்கு இரத்தப் புற்றுநோய் கண்டிருப்பதாக மே 8-ஆம் தேதி மருத்துவர்கள் உறுதிச் செய்ததை அடுத்து, 40 வயது கிருஷ்ண குமார் இந்தக் கூட்டுத் தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.
அவருடன் உயிரிழந்தது 34 வயது மனைவி டோலி, மகள்களான 12 வயது பூஜா, 6 வயது கீர்த்தி ஆகியோர் ஆவர்.
தற்கொலைக்கு அந்தத் தம்பதியர் நான்கு இரும்பு கொக்கிகள், நான்கு கயிறுகள் மற்றும் ஒரு ஏணியை வாங்கியுள்ளனர்.
சம்பவ இடத்தில் கிருஷ்ண குமார் எழுதி வைத்திருந்த கடிதமும் கைப்பற்றப்பட்டது.
மனைவி டோலியைக் கண்டாலே தனது தாயாருக்கு ஆகாது என்பதால், ஒரு வேளை நாளையே தான் இறந்து விட்டால் மனைவியின் நிலை என்னவாகும் என்ற பயத்திலேயே குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்வதாக கிருஷ்ண குமார் அதில் எழுதியுள்ளார்.
இந்நிலையில் புற்றுநோய் விஷயம் தெரிந்ததிலிருந்து தன் மகன் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், ஆனால் குடும்பமே தற்கொலை செய்துகொள்ளும் என கனவிலும் நினைக்கவில்லை என்றும் கிருஷ்ண குமாரின் தந்தை சோகத்துடன் கூறினார்.
குடும்பமே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது