
சிங்கப்பூர், ஜூன்-4 – வூட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியை மறுமேம்படுத்தி விரிவுபடுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மலேசியாவுக்குச் சொந்தமான 2 நிலங்களை சிங்கப்பூர் கையகப்படுத்துகிறது.
குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையமும் சிங்கப்பூர் நில ஆணையமும் ஒரு கூட்டு அறிக்கையில் அதனை தெரிவித்தன.
இந்த கையகப்படுத்தல், இணைப்பை மேம்படுத்துவதையும் எல்லை தாண்டிய நடமாட்டத்தை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
வூட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியை விரிவுபடுத்துவதன் மூலம், உச்ச நேரங்களில் நடப்பில் 60 நிமிடங்களாக உள்ள சராசரி பயண நேரத்தை 15 நிமிடங்களுக்குக் குறைக்க உதவும் என அவை கூறின.
0.79 ஹெக்டர் பரப்பளவு கொண்ட அவ்விரண்டு நிலங்களும் தற்போது தாவரங்கள் நிறைந்ததாகவும் பயன்படுத்தப்படாமலும் உள்ளன.
கடந்தாண்டு வூட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியைப் பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை, 2023-ரில் 269,000 ஆக இருந்ததை விட 22% அதிகரித்து 327,000 ஆக உயர்ந்தது.
2024-ஆம் ஆண்டு இறுதிப் பள்ளி விடுமுறை நாட்களில், டிசம்பர் 20-ஆம் தேதி 376,000 பயணிகள் சோதனைச் சாவடியைப் பயன்படுத்தி சாதனை படைத்தனர்.
இந்நிலையில் 2050-ஆம் ஆண்டுக்குள் சோதனைச் சாவடியைக் கடந்து செல்லும் பயணிகளின் சராசரி தினசரி எண்ணிக்கை 400,000 பேரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.