
புத்ராஜெயா, ஜூலை-1 – PETRA எனப்படும் எரிபொருள் மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சுக்கு, சிலாங்கூர் அரசு நிறுவனங்கள் இன்று மரியாதை நிமித்தம் பயணம் மேற்கொண்டன.
அதன் அமைச்சரும் துணைப் பிரதமருமான டத்தோ ஸ்ரீ ஃபாடில்லா யூசோஃப் அக்கூட்டத்திற்குத் தலைமையேற்றார்.
சிலாங்கூர் வடிகால் நீர்பாசன துறையான JPS, MBDK எனப்படும் கிள்ளான் அரச மாநகர மன்றம், தேசிய நீர் சேவை ஆணையம், LUAS எனப்படும் சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் உள்ளிட்ட துறைகள் அதில் பங்கேற்றன.
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான V. கணபதிராவும் அதில் பங்கேற்று பேசினார்.
கிள்ளானில் மேற்கொள்ளப்பட 2022 முதல் அங்கீகரிக்கப்பட்ட வெள்ளத் தடுப்புத் திட்டங்களின் தற்போதைய மேம்பாடு, நடப்பு ஒதுக்கீட்டின் விநியோகம் மற்றும் கண்காணிப்பு உள்ளிட்ட அம்சங்களை அவர் குறிப்பிட்டார்.
MBDK, JPS இடையேயான ஒத்துழைப்பு குறிப்பாக கிள்ளானில் அடிக்கடி வெள்ளம் ஏற்படும் பகுதிகளான கிள்ளான் உத்தாமா, பண்டார் புக்கிட் ராஜா, ஜாலான் மேரு உள்ளிட்ட இடங்களில் மேற்பார்வையிடுதல் குறித்தும் கணபதிராவ் விளக்கமளித்தார்.
கடல் நீர் மட்ட உயர்வு, பருவநிலை மாற்றம் போன்ற அச்சுறுத்தல்களைச் சமாளிக்க எடுக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் பகிரப்பட்டது.
கிள்ளான் மக்களின் பிரச்னைகள் மற்றும் எதிர்காலம் குறித்து, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கு இடையில் கூட்டத்தை ஏற்பாடு செய்த துணைப் பிரதமருக்கு கணபதிராவ் நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.
இச்சந்திப்பானது, கிள்ளான் மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு உரியத் தீர்வு காணும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.