
ஸ்ரீ இஸ்கண்டார், ஜூலை 2 – மலேசியாவில் ராக்கெட் ஏவுதளத்தைத் தொடங்குவதற்காக, சபா மற்றும் பகாங் ஆகிய இரு மாநிலங்களின் விண்ணப்பங்களைத் தொடர்ந்து மலேசிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துறை அமைச்சு (MOSTI) தமது முதற்கட்ட ஆய்வை மேற்கொண்டு வருகின்றது.
பல்வேறு அம்சங்களிலிருந்து ஆராய்ச்சி தேவைப்படுவதால், இந்த ஆய்வுக்கு சிறிது நேரம் எடுக்கும் என்றும் ஆர்வமிக்க அவ்விரு மாநிலங்களின் சாத்திய கூறுகளைக் கண்டறியும் செயல்பாட்டில் தமது துறையினர் ஈடுபட்டு வருவதாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துறை அமைச்சர் சாங் லி காங் கூறியுள்ளார்.
ராக்கெட் ஏவுதளத்தின் கட்டுமானப் பணிகள் 2026 ஆம் ஆண்டில் தொடங்கப்படும் என்றும் தற்போது உலகில் அதிகரித்து வரும் ராக்கெட் ஏவுதளங்களுக்குப் போதுமான இடம் குறைவாகவே உள்ளது என்றும் பெட்ரோனாஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (UTP) ஐந்தாவது தொழில்நுட்ப மாநாட்டில் உரையாற்றியபோது அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் தென்கிழக்காசியாவில் முதல் ராக்கெட் ஏவுதளத்தை உருவாக்க மலேசியா போட்டியிடுவதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
நமது நாட்டின் அமைப்பு, நிலநடுக்கம் மற்றும் எரிமலைகள் போன்ற இயற்கை பேரிடர்களிலிருந்து பாதுகாப்பாக இருப்பதாலும், உயர் மட்ட தொழில்நுட்பம், முதிர்ந்த மின்னணு மற்றும் மின்சாரத் துறையைக் கொண்டிருப்பதாலும் ராக்கெட் ஏவுதளங்களை உருவாக்குவதற்கு மலேசியா ஏற்ற இடம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், MOSTI Tech Talks திட்டத்தைப் பற்றியும் சமூக அறிவியல் முன்னேற்றங்கள் பற்றியும் பல்கலைக்கழக மாணவர்கள் அறிந்திருக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.