
ரோம், இத்தாலி, ஜூலை 2 – மக்களுக்கு பயனளிக்க கூடிய திட்டங்களை, மடானி அரசு தொடர்ந்து செயல்படுத்துமென்று, இத்தாலியில் நடைபெற்ற மலேசிய புலம்பெயர்ந்தோர் இடையிலான சந்திப்பு கூட்டத்தில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
மலேசியாவின் முந்தைய அரசாங்கங்கள், வெளிநாட்டினர் அனுபவிக்கும் மானியங்கள் திரும்பப் பெறப்படும் என்று கூறியிருந்தாலும், அதற்கேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்று பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதிகமான பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவமனைகளைக் கட்ட மடானி அரசு போதிய மானியங்களை ஒதுக்கி வருவதாகவும் இத்தாலியிலுள்ள மலேசிய புலம்பெயர்ந்தோருக்கு நாட்டை சர்வதேச அளவில் உயர்த்துவதற்கு முக்கிய பங்கு உள்ளதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தங்களின் அறிவு மற்றும் திறன்கள் தாய்நாட்டின் நல்லாட்சிக்கு பங்களிக்கும் வகையில் அமையும் என்ற தனது எதிர்பார்ப்பையும் வருகையாளர்களின் முன்னிலையில் தெரிவுப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், வெளியுறவு அமைச்சர் முகமது ஹசன், இத்தாலி மற்றும் மலேசிய தூதர் ஜாஹித் ரஸ்தம், போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக், விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் முகமது சாபு, பாதுகாப்பு அமைச்சர் கலீத் நோர்டின் மற்றும் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அஜீஸ் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.