
செப்பாங், ஜூலை-3 – சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி கொலையில் கைதான 4 சந்தேக நபர்களில் மூவரின் தடுப்புக் காவல் நீட்டிக்கப்படுகிறது.
அதற்கான நீதிமன்ற ஆணையைப் பெறுவதற்காக, அம்மூவரும் இன்று காலை செப்பாங் நீதிமன்றத்திற்குக் கொண்டுச் செல்லப்படுவார்கள்.
சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான் அதனை உறுதிப்படுத்தினார்.
சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவியான Maniisha ஜூன் 26-ஆம் தேதி மாணவர் குடியிருப்பில் இறந்துகிடந்த அடுத்த 48 மணி நேரங்களில், இந்த நால்வரும் கைதாகியிருந்தனர்.
Maniisha-வுடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த பெண்களில் ஒருவரது காதலனே, இக்கொலையில் முதன்மை சந்தேக நபராவார்.
காதலியுடன் ஏற்கனவே பல இரவுகளை அவன் அங்குக் கழித்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், சம்பவத்திற்கு முன் காதலி ஊர் திரும்பிய போது அங்கு மீண்டும் தங்கியுள்ளான்.
காதலி கொடுத்துச் சென்ற வீட்டு சாவி மற்றும் access அட்டையை அவன் பயன்படுத்தியுள்ளான்.
அந்தச் சூழ்நிலையில், ஏற்கனவே தீய நோக்கங்களைக் கொண்டிருந்த சந்தேக நபர், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, Maniisha-வை கூர்மையற்ற ஒரு பொருளால் தாக்கிக் கொன்று விட்டு, கொள்ளையடித்து தப்பியோடியது போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது.