
புத்ராஜெயா, ஜூலை- 3 – நாட்டின் தலைமை நீதிபதி பொறுப்பு நிரப்பப்படும் வரை, நடப்பு மலாயா தலைமை நீதிபதி தான் ஸ்ரீ ஹஸ்னா மொஹமட் ஹஷிம் அப்பொறுப்புகளைத் தற்காலிகமாக கவனித்து வருவார்.
கூட்டரசு அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு ஏற்ப இம்முடிவு அமைவதாக, புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தலைமை நீதிபதி பொறுப்பு காலியானாலோ அல்லது நோய்வாய்ப்பட்டு அவரால் பணியாற்ற முடியாமல் போனாலோ, அல்லது வெளிநாட்டில் இருந்தாலோ, மேல்முறையீட்டு நீதிமன்ற தலைவர் அப்பொறுப்புகளை கவனிப்பார்; ஒருவேளை அவரும் நாட்டில் இல்லாத பட்சத்தில் மலாயா தலைமை நீதிபதி அப்பொறுப்பை இடைக்காலமாக கவனிக்க முடியும் என அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது.
இந்நிலையில், நீதியின் பாதுகாவலர்களாக மலேசிய நீதித்துறை எப்போதும் தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்து வருகிறது; அவ்வகையில் மக்களுக்கும் நாட்டுக்கும் முழு அர்ப்பணிப்புடன் அது தொடர்ந்து சேவை செய்யும் என்றும் அவ்வறிக்கை சுட்டிக் காட்டியது.
ஆறாண்டுகளாக நாட்டின் தலைமை நீதிபதியாக இருந்த துன் தெங்கு மைமுன் துவான் மாட், புதன் கிழமையோடு கட்டாயப் பணி ஓய்வுப் பெற்றதை அடுத்து, அப்பொறுப்பு காலியாகியுள்ளது.
மலேசிய நீதிபரிபாலனத் துறை வரலாற்றிலேயே அந்த உயரியப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமைக்குரியவர் தெங்கு மைமுன்.