
கோலாலம்பூர், ஜூலை-4 – கோலாலம்பூரில் கராவோக்கே இரவு கேளிக்கை விடுதியில் வெறும் அரை மணி நேரங்களை செலவிட்டவருக்கு, 97,000 ரிங்கிட் கட்டணம் விதிக்கப்பட்ட சம்பவம் வைரலாகியுள்ளது.
ஜூன் 27 இரவு கட்டண இரசீது வெளியிடப்பட்டு, மறுநாள் அதிகாலை முழுக் கட்டணும் செலுத்தப்பட்டுள்ளது.
வைரலாகியுள்ள இரசீதின் படி, ஆக அதிகமாக 3 Louis XIII cognac மதுபான பாட்டில்களுக்கு 78,888 ரிங்கிட் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கு மேற்பட்டு, கேளிக்கை விடுதியின் பணியாளர்களுக்கும் பொது உறவு உறுப்பினர்களுக்கும் தலா 300 ரிங்கிட் கட்டணம் போடப்பட்டது.
இவற்றின் மொத்தக் கட்டணம் 82,948 ரிங்கிட்டாகும்.
10 விழுக்காடு சேவை வரியும், 8 விழுக்காடு SST வரியும் சேர்த்து ஒட்டுமொத்தக் கட்டணம் 97,760 ரிங்கிட் 60 சென்னாகியுள்ளது.
SST வரி மட்டுமே 6,600 ரிங்கிட்டை தாண்டியுள்ளது; இது உள்ளூரில் ஒரு புதிய மோட்டார் சைச்கிளின் விலையை விட அதிகமாகும்.
வைரல் பதிவால் வலைத்தளவாசிகள் வாயைடைத்துப் போயுள்ளனர்.
ஒரு நாள் இரவு கூட இல்லை; வெறும் அரை மணி நேரங்களுக்கே கிட்டத்தட்ட 100,000 ரிங்கிட் செலவெல்லாம் தேவையா என பலர் கேள்வி கேட்டனர்.
மேலும் சிலர், கேளிக்கைகளுக்கு இவ்வளவு உயரிய SST வரி விகிதம் இருப்பது அநியாயம் என்றனர்.
அதே சமயம், அந்த இரசீது உண்மையானது தானா என்றும் சிலருக்கு சந்தேகம்; காரணம் SST வரி விரிவாக்கம் அமுலுக்கு வந்த ஜூலை 1-ஆம் தேதிக்கு முன்னரே இரசீது வெளியிடப்பட்டுள்ளதை அவர்கள் சுட்டிக் காட்டினர்.
ஆண்டு முழுமைக்கும் வேலை செய்தாலுமே 100,000 வெள்ளி சம்பளத்தை நெருங்க முடியாமல் ஏராளமானோர் தவிக்கும் நிலையில், ஒரே இரவில் அதுவும் அரை மணி நேரத்திற்கு 97,000 ரிங்கிட் கேளிக்கை விடுதியில் செலவழிக்கப்பட்ட இச்சம்பவம் தற்போது பேச்சுப் பொருளாகியுள்ளது.