
கோலாலம்பூர், ஜூலை-6,
சான்றிதழ் பெறாத உலோகப் பொருட்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து விநியோகித்து வந்த ஒரு கும்பலை போலீஸ் முறியடித்துள்ளது.
வெள்ளிக்கிழமை ஜோகூர், சிலாங்கூர் மற்றும் மலாக்காவில் 6 தொழிற்சாலைகள் சோதனை செய்யப்பட்டதில், 96.35 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள உலோகப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புக்கிட் அமான் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அந்த ஒருங்கிணைந்த சிறப்பு நடவடிக்கையில், 57 வெளிநாட்டினர் உட்பட 60 பேர் கைதாகினர்.
முறையான ஆவணங்கள் இல்லாமல் கட்டுமானத் துறை மற்றும் பிற தொழில்களுக்கு எஃகு மற்றும் உலோகப் பொருட்களை இறக்குமதி செய்தது, பதப்படுத்தியது, விநியோகித்தது உள்ளிட்ட குற்றங்கள் கண்டறியப்பட்டன.
கட்டுமானப் பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்யப்பட்ட உலோகங்களுக்கான PPS எனப்படும் செல்லுபடியாகும் தயாரிப்பு சான்றிதழ் ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறியது உட்பட பல்வேறு மீறல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
தவிர, பல வளாகங்களில் ஆவணமற்ற வெளிநாட்டு தொழிலாளர்களும் பணியமர்த்தப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.
தரமற்ற உலோகப் பொருட்களைப் பயன்படுத்துவது பொது மக்களுக்கும் தொழில்துறைக்கும் பெரும் பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்துமென அத்துறை சுட்டிக் காட்டியது.
இந்தப் பொருட்கள் கட்டுமானத் தொழில் மேம்பாட்டு வாரியமான CIDB மற்றும் SIRIM போன்ற பொறுப்பான அமைப்புகளால் சான்றளிக்கப்பட வேண்டும் எனவும் அது கூறிற்று.