
கோலாலம்பூர், ஜூலை-12 – ல்நிலை நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமனத்தை சர்ச்சையாக்கி, பிரதமர் விடுமுறையில் செல்ல வேண்டுமென எதிர்கட்சிகள் வற்புறுத்துவது நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்றாகும்.
அதுவும் அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு உட்பட பல்வேறு புவிசார் அரசியல் விவகாரங்களை நாடு எதிர்கொள்ளும் இந்தச் சமயத்தில் இது ஒரு தேவையற்ற – பொறுப்பற்ற கோரிக்கையாகும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
அக்டோபரில் நடைபெறவுள்ள ஆசியான் உச்ச நிலை மாநாட்டுக்கு முன்னோட்டமாக இப்போது தான் ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டை மலேசியா நடத்தியது.
ஆசியான் உச்சநிலை மாநாட்டுக்காக அக்டோபரில் உலகின் முக்கியத் தலைவர்கள் கோலாலம்பூரில் முகாமிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 13-ஆவது மலேசியத் திட்டமும் விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
ஆகவே டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அரசாங்கத்தின் முழு கவனமும் மேற்கண்ட நிகழ்வுகளுக்கான தயார்நிலையில் இருக்க வேண்டும்.
இந்த நேரத்தில் விடுமுறையில் செல்லுமாறு பிரதமரை சீண்டிப் பார்ப்பது எதிர்கட்சியினரின் முதிர்ச்சியின்மையைக் காட்டுவதாக அந்த அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
நீதிபதிகள் நியமனத்தில் பிரதமர் அல்லது அரசாங்கத்தின் தலையீடு இல்லை என பலமுறை தெளிவுப்படுத்தப்பட்டு விட்ட பிறகும், எந்தவோர் ஆதாரமுமின்றி எதிர்கட்சிகள் இவ்விஷயத்தை அரசியலாக்குகின்றனர்.
இதில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் லத்திப்பா கோயாவும் சேர்ந்துகொண்டுள்ளார்.
இவரும் எந்தவோர் அடிப்படை ஆதாரங்களும் இன்றி மூன்றாம் தரப்பினரின் பேச்சை ஆமோதித்து ஒருதலைபட்சமாகப் பேசுகிறார்.
இவ்வேளையில் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் வீட்டுக் காவல் தொடர்பான கூடுதல் அரச உத்தரவும் சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது.
அவ்விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் அது குறித்து பொதுவில் விவாதிப்பது முறையாகாது.
நாட்டில் வீட்டுக் காவல் என்ற சட்டம் இதுவரை இல்லை; அதனை அறிமுகப்படுத்தும் கடப்பாட்டை உறுதிச் செய்யும் வகையில் உள்துறை அமைச்சு வாயிலாக அசாங்கம் கடந்தாண்டு முதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டே அவ்விவகாரம் கையாளப்பட வேண்டும்.
எனவே, கையில் கிடைத்த விஷயங்களை எல்லாம் அரசாங்கத்தைத் தாக்குவதற்குப் பயன்படுத்துவது நியாயமல்ல என பெயர் குறிப்பிட விரும்பாத அரசியல் பார்வையாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
நடப்புச் சவால்களை எதிர்கொண்டு நாட்டை வழிநடத்த அரசாங்கத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டியது முக்கியமாகும் என்றார் அவர்.