
புத்ராஜெயா, ஜூலை-14 – நீதித்துறையின் சுதந்திரத்தை வலியுறுத்தி மலேசிய வழக்கறிஞர் மன்றம் இன்று புத்ராஜெயாவில் நடத்திய அமைதிப் பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கூட்டரசு நீதிமன்ற வளாகம் தொடங்கி 2.6 கிலோ மீட்டர் தூரம் வெயிலையும் பொருட்படுத்தாமல் அவர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.
வழக்கறிஞர்களோடு அரசியல் முக்கியப் புள்ளிகளும் அதில் பங்கேற்றனர்.
பிரதமரின் புதல்வியும் பி.கே.ஆர். கட்சியின் துணைத் தலைவருமான நூருல் இசா அன்வாரும் அதில் பங்கேற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
எதிர்கட்சியைச் சேர்ந்த கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ தக்கியுடின் ஹசான், தாசேக் கெளுகோர் எம்.பி வான் சைஃபுல் வான் ஜான், முன்னாள் அமைச்சர் தான் ஸ்ரீ Dr ராயிஸ் யாத்திம், முன்னாள் சட்டத் துறைத் தலைவர் தான் ஸ்ரீ தோமி தோமஸ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
“அனைவரின் கண்களும் நீதித்துறையின் மீதே” , “நீதித்துறையின் சுதந்திரத்தை கட்டிக் காப்போம்”, “நீதித்துறைக்கு நீதி கேட்போம்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் முழக்கமிட்டும் அவர்கள் ஊர்வலமாகக் சென்றனர்.
பேரணி பங்கேற்பாளர்களை போலீஸார் அணுக்கமாகக் கண்காணித்த வேளை, ட்ரோன் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டது. அமைதி ஊர்வலம் பிற்பகல் 3 மணிக்கு பிரதமர் துறை கட்டடத்தைச் சென்றடைந்தது.
வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் மொஹமட் எஸ்ரி அப்துல் வஹாப் தலைமையில் 4 முக்கியக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் பிரதமர் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
நாட்டின் தலைமை நீதிபதி, மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் உட்பட முக்கிய நீதிபதிகளுக்கான காலியிடங்களை உடனடியாக நிரப்புதல், JAC எனப்படும் நீதித்துறை நியமன ஆணையக் கூட்டத்தின் நிமிடங்களை பகிரங்கப்படுத்துதல், நீதித்துறையில் தலையீடு இருந்ததாகக் கூறப்படுவதை விசாரிக்க அரச விசாரணை ஆணையத்தை அமைத்தல், காலியாக உள்ள நீதித்துறைப் பணிகளை நிரப்புதல் ஆகியவையே அந்நான்கு கோரிக்கைகளாகும்.
மகஜர் ஒப்படைப்புக்குப் பிறகு பங்கேற்பாளர்கள் அமைதியாக கலைந்துச் சென்றனர்.