
கோலாலாம்பூர், ஜூலை-14 – பல்லின மக்கள் நல்லிணக்கத்தோடு வாழும் இந்நாட்டில், அந்த ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் அவ்வப்போது சில ‘கீறல்கள்’ விழுந்தாலும், ஒன்றுபட்ட மலேசியர்களுக்கு இடையிலான பிணைப்பை யாரும் மறுக்க முடியாது.
இன – மத – நிற பேதமின்றி மலேசியர்களுக்கே உரித்தான நட்பும் அன்வும் விவரிக்க முடியாதவை.
அப்படிபட்ட ஒரு நெகிழ்ச்சியான வீடியோ தான் தற்போது வைரலாகியுள்ளது.
இந்திய அண்டை வீட்டுக்காரர் வீடு திரும்பியவுடன், ஓர் இளம் மலாய் சிறுவன் அன்போடு “அப்பா” என்று ஓடிச் சென்று உற்சாகமாக வரவேற்கும் அவ்வீடியோ, வலைத்தளவாசிகளின் மனதை உருக்கியுள்ளது.
அந்த வீடியோவில், “அப்பா” வேலைக்குச் சென்றுவிட்டதாக அவ்வாடவரின் மனைவி விளையாட்டாகக் கூறிய பிறகு, அந்த நபர் சிறுவனை அன்பாகத் தூக்கிக் கொண்டு தனது கைகளில் சுமந்துகொண்டே, வீட்டை நோக்கி ஒன்றாக நடந்து செல்கிறார்.
பின்னர் அம்மாது ஓடுவது போல் பாசாங்கு செய்தார்; சிறுவனும் அவரைத் துரத்திக் கொண்டே ஓடினான் – ஆனால் பாதியிலேயே நின்றுவிட்டு வீட்டில் இருந்த அந்த ‘அப்பாவிடம்’ திரும்பிச் சென்றாள்; அதனை அம்மாது வேடிக்கையாக கவனித்தார்.
“அந்த தருணம் உண்மையிலேயே மனதைத் தொடும் வகையில் இருந்தது. அவர்களுக்கு இரத்த உறவு இல்லை என்றாலும், அவர்களின் பாசம் உயிரியலுக்கு அப்பாற்பட்டது – இனப் பிரிவினை இல்லை, வெறும் தூய்மையான மற்றும் நேர்மையான உணர்ச்சிப் பிணைப்பு மட்டுமே,” என்று ஒரு வலைத்தளவாசி எழுதியுள்ளார்.