
ஷா அலாம் , ஜூலை 16 – ஜூன் 7 ஆம் தேதி காணாமல் போனதாகக் கூறப்படும் 17 வயதுடைய பிரிட்டிஷ் இளைஞர் டேவிட் பாலிசோங், ( David Balisong ) தன்னைத் தேட வேண்டாம் என்று தனது குடும்பத்திற்கு செய்தி அனுப்பியதாக தெரியவந்துள்ளது.
ஜூலை 9 ஆம் தேதி தனது தாயாருக்கு மின்னஞ்சல் மூலம் டேவிட் அந்த தகவலை அனுப்பியதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ உசேய்ன் ஒமார் கான்
( Husein Omar Khan ) தெரிவித்தார். “கவலைப்பட வேண்டாம், தன்னைக் கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டாம் என்ற கூற்று டேவிட்டின் மின்னஞ்சலின் உள்ளடக்கங்களில் இருந்தது.
மேலும், குடும்ப உறுப்பினர்கள் வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்றும் அவர் பிரார்த்தனை செய்திருந்ததோடு தனது குடும்பத்தாரிடம் மன்னிப்பையும் கேட்டுக் கொண்டுள்ளார் என இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் உசேய்ன் கூறினார்.
அதோடு நாடு திரும்பும் தகவல் குறித்து எதனையும் டேவிட் தனது குடும்பத்தினருக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவிக்கவில்லை. அவர் காணாமல்போனது தொடர்பான விசாரணையில் இதுவரை அறுவரிடம் வாக்குக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் டேவிட்டின் தாயார், பஸ் ஓட்டுனர், நாணய மாற்று இடத்தைச் சேர்ந்த ஊழியர் மற்றும் போலீஸ்காரர்களும் அடங்குவர்.
விசாரணையில், ஜூன் 7 ஆம் தேதியன்று காலை மணி 10.09 அளவில் KL சென்ட்ரலில் டேவிட் கடைசியாக காணப்பட்டது அங்குள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவில் மூலம் தெரியவந்துள்ளது. இதுவரை அந்த இளைஞர் நாட்டை விட்டு வெளியேறியதற்கான எந்த பதிவும் இல்லை என்பதோடு , அவரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக உசேய்ன் தெரிவித்தார்.