
புத்ராஜெயா, ஜூலை-18- முக்கிய நீதிபதி பதவிகளுக்கான நியமனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதானது, அது தொடர்பில் வாரக் கணக்கில் நீடித்த தம் மீதான வசைப்பாடல்களை முடிவுக்குக் கொண்டு வருமென, பிரதமர் கூறியுள்ளார்.
நீதித் துறையில் தலையீடு இல்லை என பலமுறை தெரிவித்தும், சம்பந்தப்பட்டவர்கள் கேட்கவில்லை; இப்போது மாமன்னரின் ஒப்புதலின் பேரில் முக்கிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இனியாவது தம் மீதான அவதூறுகளும், அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளும் முடிவுக்கு வருமென நம்புவதாக, டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
நீதிபதிகள் நியமன ஆணையத்தில் தொடங்கி, மாமன்னரிடம் பரிந்துரை வழங்கப்பட்டு, மலாய் ஆட்சியாளர் மன்றத்தின் கருத்துகளும் பெறப்பட்டு, மிகவும் வெளிப்படையான முறையில் இந்நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார் அவர்.
இவ்வேளையில், முன்னாள் சட்டத் துறைத் தலைவர் தான் ஸ்ரீ அஹ்மாட் தெரிருடின் மொஹமட் சாலேவை (Ahmad Terriruddin Mohd Salleh) தலைமை நீதிபதிப் பொறுப்புக்கு தாம் பரிந்துரைத்திருப்பதாக வெளியான செய்தியும் வெறும் அவதூறே என நிரூபணமாகியுள்ளதை அன்வார் சுட்டிக் காட்டினார்.
3 முக்கிய நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், காலியாக உள்ள மற்ற பதவிகள் விரைவில் நிரப்பப்படுமென்றும் பிரதமர் தெளிவுப்படுத்தினார்.
முன்னதாக, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டத்தோ வான் அஹ்மாட் ஃபாரிட் வான் சாலே (Wan Ahmad Farid Wan Salleh) நாட்டின் புதியத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இம்மாதத் தொடக்கத்தில் கட்டாயப் பணி ஓய்வுப் பெற்ற துன் தெங்கு மைமுன் துவான் மாட்டுக்கு (Tun Tengku Maimun Tuan Mat) பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே சமயம், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக டத்தோ அபு பாக்கார் ஜாய்ஸ் (Abu Bakar Jais) நியமனம் செய்யப்பட, மாமன்னர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
சபா – சரவாக் தலைமை நீதிபதியாக டத்தோ அசிசா நவாவி (Azizah Nawawi) நியமிக்கப்பட்டுள்ளார்.