
புத்ராஜெயா, ஜூலை-23- இவ்வாண்டு தேசிய தினத்தை முன்னிட்டு 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்களுக்கும் MyKad அட்டை வாயிலாக 100 ரிங்கிட் SARA உதவிநிதி வழங்கப்படுகிறது.
அதே சமயம், மலேசிய தினத்தை ஒட்டி, செப்டம்பர் 15-ஆம் தேதி கூடுதல் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த நற்செய்திகளில் இவை குறிப்பிடத்தக்கவையாகும்.
இவ்வேளையில், செப்டம்பர் முதல் RON95 பெட்ரோல் விலை 1 ரிங்கிட் 99 சென்னாகக் குறைக்கப்படுகிறது. நடப்பில் அதன் விலை 2 ரிங்கிட் 5 சென்னாக உள்ளது.
இந்த விலைக் குறைப்பின் வாயிலாக சுமார் 18 மில்லியன் மக்கள் பயனடைவார்கள் என பிரதமர் சொன்னார்.
ஏழை மற்றும் பரம ஏழைகளின் நிதிச் சுமைகளைக் குறைக்கும் வண்ணம் நாளை வியாழக்கிழமை Sejahtera MADANI திட்டமும் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றது.
மக்களின் வாழ்க்கைச் செலவினத்தைக் குறைக்க உதவும் வகையில், டோல் கட்டண உயர்வையும் அரசாங்கம் ஒத்திவைத்துள்ளது.
SDE, LPT2, SKVE, LLB, MEX உள்ளிட்ட நெடுஞ்சாலைகளை இந்த டோல் கட்டண உயர்வுகள் உட்படுத்தியுள்ளன; இது ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அதற்கான 500 மில்லியன் ரிங்கிட் செலவை அரசாங்கமே ஏற்றுக் கொள்கிறது.
மலிவு விலையில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் ரஹ்மா மடானி விற்பனைத் திட்டத்திற்கு 600 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் 300 மில்லியன் ரிங்கிட் மட்டுமே அத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
இவ்வாண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் ஒப்பந்த மருத்துவர்கள் உட்பட 4,352 காலியிடங்கள் நிரப்பப்படும்.
தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் ஆகஸ்ட் 1 முதல் 1,700 ரிங்கிட் என்ற அளவில் அமுலுக்கு வருகிறது.
நாட்டு மக்களே ஆவலுடன் காத்திருந்த நிலையில், மலேசியர்களுக்கு நன்றி பாராட்டு விதமாக பிரதமர் இவ்வறிவிப்புகளை வெளியிட்டு மனங்குளிர வைத்துள்ளார்.