
ரந்தாவ் பஞ்சாங், ஜூலை 28 – கிளந்தான் சுங்கத்துறையின் அதிகாரிகள் புதன்கிழமையன்று இரண்டு வெவ்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட 10 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான
102 கிலோ கஞ்சா பூக்களை கடத்தும் முயற்சியை முறியடித்தனர்.
வரி தீர்வையற்ற மண்டல நுழைவு பகுதியிலும் பஸ் நிலையத்திலும் அந்த கஞ்சா பூக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கிளந்தான் சுங்கத்துறையின் இயக்குனர் வான் ஜமால் அப்துல் சலாம் வான் லோங் (Wan jamal Abdul Salam Wan Long) தெரிவித்தார். மேலும் இந்த நடவடிக்கையின்போது இரண்டு பெண்கள் உட்பட மூன்று தனிப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
வரி தீர்வையற்ற மண்டலப் பகுதியின் நுழைவு இடத்தில் கைவிடப்பட்ட மூன்று பேக்குகளில் புதன்கிழமையன்று காலை 10.30 மணியளவில் நடத்தப்பட்ட முதல் சோதனையில் 88 பொட்டலங்களைக் கொண்ட கஞ்சா பூக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அன்றைய தினம் மோட்டார்சைக்கிளின் பின்னால் ஒரு பேக்குடன் அமர்ந்திருந்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 32 பொட்டலங்களைக் கொண்ட கஞ்சா பூக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வான் ஜமால் கூறினார். 1952 ஆம் ஆண்டின் அபாயகரமான போதைப் பொருள் சட்டத்தின் 39 பி விதியின் கீழ் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.