
கோலாலம்பூர், ஜூலை 30 – நேற்று, ஜாலான் கியா பெங்கிலுள்ள (Jalan Kia Peng) கட்டிடம் ஒன்றின் 23 வது மாடியில் ‘காலிங் சென்டர்’ என்ற பெயரில் மறைமுகமாக சூதாட்ட மையத்தை நடத்தி வந்த கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
டாங் வாங்கி மாவட்ட காவல் தலைமையகத்துடன் (IPD) இணைந்து கோலாலம்பூர் D7 குற்ற புலனாய்வு பிரிவு மற்றும் கோலாலம்பூர் காவல் துறை தலைமையகம் இச்சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
இந்நடவடிக்கையில் இரண்டு சீன நாட்டவர்கள் மற்றும் 11 உள்ளூர்வாசிகள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் உசுப் ஜான் முகமது தெரிவித்துள்ளார்.
மேலும் 14 கணினி உபகரணங்கள், இரண்டு மடிக்கணினிகள் உட்பட பல்வேறு பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் வளாகத்தை வாடகைக்கு எடுத்து சூதாட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இக்கும்பலுக்கு சுமார் 3,000 ரிங்கிட் முதல் 4,000 ரிங்கிட் வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
இக்குற்றம் சூதாட்ட சட்டம் மற்றும் குடிநுழைவு சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றதென்று அறியப்படுகின்றது.