
ஜோகூர் பாரு, ஜூலை-30- கொடூரமான முறையில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 6 வயது சிறுவன் திஷாந்தின் மரணத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அவனது தாய் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதை, மகளிர்-குடும்ப-சமூக மேம்பாட்டுத் துறைகளுக்கான ஜோகூர் ஆட்சிக் குழு உறுப்பினர் Khairin-Nisa Ismail உறுதிப்படுத்தினார்.
அக்குடும்பத்திற்கு உளவியல் ரீதியான உதவிகளை வழங்குவதற்காக சமூக நலத் துறையான JKM, நேற்று அதிகாரிகளை அனுப்பியிருந்தது.
எனினும், அவ்வுதவியை அவர்கள் நிராகரித்து விட்டதாகவும் அவர் சொன்னார்.
இந்நிலையில், திஷாந்தின் தாய் மீது மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் அறிக்கைக்காகக் காத்திருப்பதாகவும், அது கிடைத்ததும், உளவியல் உதவிகள் தவிர வேறென்ன உதவிகளை அக்குடும்பத்திற்கு வழங்கலாம் என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என Khairin-Nisa தெரிவித்தார்.
கடந்த வாரம் ஜோகூர் பாரு, தாமான் புக்கிட் இண்டாவில் காணாமல் போனதாக கூறப்பட்ட திஷாந்த், நெகிரி செம்பிலான், ஜெம்போலில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டான்.
அவனது 36 வயது தந்தை கைதாகி துருவி துருவி விசாரிக்கப்பட்டதில், அவன் புதைக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
கேபிள் கம்பியால் கழுத்து நெரிக்கப்பட்டு கொடூரமான முறையில் திஷாந்த் கொலையுண்டது சவப்பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.