
கோலாலம்பூர், ஜூலை 31 – தீபகற்ப மலேசியா மற்றும் போர்னியோ மாநிலங்களுக்கு இடையிலான சுகாதாரப் பணியாளர்களின் சீரற்ற நிலையை நிவர்த்தி செய்வதற்காக, நிரந்தரப் பதவிகளுக்கு நியமிக்கப்படும் ஒப்பந்த மருத்துவ அதிகாரிகள், e-Placement 2.0 முறை மூலம் சபா அல்லது சரவாக்கில் குறைந்தபட்சம் பணியாற்றும் விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதை சுகாதார அமைச்சு கட்டாயமாக்கியுள்ளது.
இதற்கு முன்பு ஒருபோதும் செயல்படுத்தப்படாத இந்த அணுகுமுறை, நாட்டில் நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் தாதியர்களின் நியமனத்தில் உள்ள இடைவெளியைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் வலுவான உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கெப்லி அகமட் ( Dzulkefly Ahmad ) கூறினார்.
மூன்று தேர்வுகளில் ஒன்று சபா அல்லது சரவாக்கில் பணியமர்த்தப்பட வேண்டும், இது இதற்கு முன்பு ஒருபோதும் இவ்வாறு செய்யப்படவில்லை என்று இன்று மக்களவையில் வாய்மொழி கேள்வி-பதில் அமர்வின் போது அவர் தெரிவித்தார்.
தீபகற்ப மலேசியா, சபா மற்றும் சரவாக் இடையே சுகாதாரப் பாதுகாப்பு மனித வளங்களின் விநியோகத்தில், குறிப்பாக நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் தாதியர்களின் பணியமர்த்தலில் உள்ள ஏற்றத்தாழ்வைக் குறைக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து சரவா Betong நாடாளுமன்ற உறுப்பினரான GPS சின் டத்தோ டாக்டர் ரிச்சர்ட் ராபு எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது Dzulkefli இதனை தெரிவித்தார்.