
கோலக்கிள்ளான், ஆகஸ்ட் 1 – கடந்த ஜூலை 26 ஆம் தேதியன்று, கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில், கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் ஏற்பாட்டில் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான தமிழ் சார்ந்த போட்டி நிகழ்வுகள் மிக சிறப்பாக நடைபெற்றது.
தேசிய இளையோர் விளையாட்டு துறையும் மற்றும் சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்துடன் இணைந்து, சிம்பாங் லீமா, ஹைகோம் மற்றும் தாமான் செந்தோசா தமிழ்ப்பள்ளிகள் இந்நிகழ்விற்கு முக்கிய ஆதரவை வழங்கியுள்ளன.
தமிழ் சார்ந்த இப்போட்டியில் சிலாங்கூர் மாநிலம் உட்பட பிற மாநிலங்களிலிருந்தும் சுமார் 50 தமிழ்ப்பள்ளிகள் கலந்துக் கொண்டுள்ள நிலையில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
தமிழ் மற்றும் மலாய் மொழியில் கட்டுரை எழுதுதல், கவிதை படைத்தல், ஆங்கில மொழியில் கதை சொல்லும் போட்டி, வண்ணம் தீட்டுதல், மற்றும் திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி ஆகியவை சிறப்பாக நடைபெற்றன.
இந்து இளைஞர் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் மாபெரும் வெற்றியாளராக சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி தேர்வு செய்யப்பட்டு, இந்நிகழ்வின் சுழற்கிண்ணத்தையும் அவர்கள் தட்டி சென்றுள்ளனர்.
இந்த இயக்கத்தின் அடுத்த நிகழ்ச்சியாக, நாளை இலக்கிய பேருரையும் , வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பூப்பந்து போட்டியும் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பங்குபெற விரும்பும் பொதுமக்கள் (HYOPORTKLANG) எனும் முகநூல் பக்கத்தை அணுக வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.