
கோலாலம்பூர், ஆகஸ்ட்-5 – அரசியலில் நிலைத்து நிற்க நிதானமும், பொறுமையும், முதிர்ச்சியும் தேவை.
ஏனென்றால் இன்று நம்மை தூக்கிக் கொண்டாடும் வாக்காளர்கள், நம் செயல்கள் அடிப்படையில் நாளையே தூக்கி வீச தயங்க மாட்டார்கள்.
எனவே, கர்வமும் திமிரும் அரசியலில் நம்மை காணடிக்கச் செய்து விடுமென, DAP இளைஞர் பிரிவுக்கு ம.இ.கா செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் நினைவுறுத்தியுள்ளார்.
“ம.இ.கா மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சி என்றும் எனவே அதனுடன் விவாதத்தில் ஈடுபடுவது வீண் வேலை” என்றும் DAP இளைஞர் பிரிவு கிண்டலாக பேசியதற்கு பதிலடியாக சிவராஜ் அவ்வாறு சொன்னார்.
இந்தியர்களுக்கான சேவை தொடர்பில் ம.இ.கா மற்றும் DAP இடையே வெடித்துள்ள அறிக்கைப் போருக்குத் தீர்வாக, புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துள்சி மனோகரனுடன் பொது விவாதம் நடத்தத் தயார் என, பேராக் ம.இ.கா இளைஞர் பிரிவுத் தலைவர் தீகேஷ் கணேசன் முன்னதாக சவால் விட்டார்.
அந்த அழைப்பை நிராகரித்து, DAP இளைஞர் பிராவு ம.இ.காவைத் ‘தாக்கியுள்ளது.’
இந்நிலையில், காலங்காலமாக தேசிய முன்னணியை எதிர்த்தே அரசியல் செய்து வந்த DAP, இன்று பதவிக்காக அதனுடன் அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதை சிவராஜ் சுட்டிக் காட்டினார்.
அதிகாரத்திற்காக, கொடுத்த வாக்குறுதியை எல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்ட DAP, இன்று ம.இ.காவைக் குறைக் கூறுவது வேடிக்கையாக உள்ளது.
“இன்று ஆளுங்கட்சியில் இருக்கும் நீங்கள் நாளையே எதிர்கட்சியாகலாம்; அதனை நினைவில் கொண்டு பணிவாக நடக்கக் கற்றுக்கொள்ளுங்கள்”
“மாறாக, தொடர்ந்து இறுமாப்போடு இருந்தால், இந்த ஒற்றுமை அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வித்திட்டு, கடைசியில் இருக்குமிடமே தெரியாமல் போய் விடுவீர்கள்” என சிவராஜ் காட்டமாகக் கூறினார்.