
குவாந்தான், ஆகஸ்ட்-7 – 3 ஆண்டுகளுக்கு முன் லஞ்சம் வாங்கியதாக சுமத்தப்பட்ட 98 குற்றச்சாட்டுகளில் 40 குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டதையடுத்து, பஹாங் செராத்திங் (Cherating) போலீஸ் நிலைய முன்னாள் தலைவருக்கு ஒட்டுமொத்தமாக 20,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
56 வயது அனுவார் யாக்கோப்புக்கு (Anuar Yaakob), ஒரு குற்றத்திற்கு 500 ரிங்கிட் வீதம் 40 குற்றங்களுக்கு 20,000 ரிங்கிட் அபராதம் விதித்து, குவாந்தான் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அபராதம் செலுத்தத் தவறினால் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிபதி அறிவித்தார்.
மீதமுள்ள 58 குற்றச்சாட்டுகள், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ், பிரதிவாதியால் சமர்ப்பிக்கப்பட்ட மனு பேரத்தின் ஒரு பகுதியாக நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்பட்டு, தள்ளுபடி செய்யப்பட்டன.
முன்னதாக, 31,400 ரிங்கிட்டை லஞ்சமாகப் பெற்றதாக 2023 ஆகஸ்டில் அனுவார் மீது அந்த 98 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
2021 ஜனவரி முதல் 2022 செப்டம்பர் வரை வங்கிக் கணக்கு வாயிலாக சில தனிநபர்களிடமிருந்து 150 ரிங்கிட் முதல் 1,000 ரிங்கிட் வரை லஞ்சம் வாங்கியதாக அனுவார் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
அக்காலக் கட்டத்தில் அவர் சார்ஜனாகவும், பின்னர் சார்ஜன் மேஜராகவும் பஹாங் போலீஸ் தலைமையகத்திலும், பிறகு செராத்திங் போலீஸ் நிலையத்திலும் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், அனுவார் அபராதத் தொகையான 20,000 ரிங்கிட்டையும் முழுமையாகச் செலுத்தி சிறைத் தண்டனையிலிருந்து தப்பியுள்ளார்.