
செப்பாங், ஆகஸ்ட்-11- பினாங்கு முன்னாள் முதல்வர் லிம் குவான் எங் மீதான ஊழல் வழக்கில் அரசு தரப்பின் முக்கிய சாட்சியான டத்தோ ஸ்ரீ ஜி. ஞானராஜா வீட்டில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்துக்கும், அவ்வழக்கிற்கும் தொடர்பில்லை என்பதை போலீஸ் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது.
இதுவரையிலான விசாரணையில் அதற்கான ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை; எனவே அது இன்னமும் ஒரு கொள்ளைச் சம்பவமாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளதாக, சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ Shazeli Kahar கூறினார்.
வீட்டிலிருந்து விலையுயர்ந்த பொருட்கள் காணாமல் போயிருப்பது, புகாரிலும் விசாரணையிலும் தெரிய வந்துள்ளது என்றார் அவர்,
இதுவரை 16 பேரிடம் வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டுள்ள நிலையில், யாரும் கைதுச் செய்யப்படவில்லை எனவும் அவர் சொன்னார்.
ஞானராஜா வீடு மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் பொருத்தப்பட்ட CCTV கேமரா பதிவுகளையும் போலீஸ் சேகரித்து வருவதாக Shazeli தெரிவித்தார்.
அச்சம்பவத்தில் குறைந்தது 300,000 ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் களவாடப்பட்டதாக ஞானராஜா கூறியதாக கடந்த வாரம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஆயுதமேந்திய கும்பல் தன்னைக் குறி வைத்து தாக்கியதாகவும், இனியும் நீதிமன்றத்தில் வந்து சாட்சியமளிக்கக் கூடாது என மிரட்டியதாகவும், ஆகஸ்ட் 7-ஆம் தேதி நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ஞானராஜா கூறியிருந்தார்.
மர்ம நபர்கள் 10 பேர் வீடு புகுந்து தன்னைக் கட்டிப் போட்டு தாக்கியதாகவும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.