
கோலாலலம்பூர், ஆக, 13 – 230 தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு புகைபிடிக்கும் பிரச்சனை இருப்பதை சுகாதார அமைச்சு கண்டறிந்துள்ளது.
அவர்களில் 193 பேர் கடந்த ஆண்டு புகைபிடிப்பதை நிறுத்தும் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
கூடுதலாக 44,211 இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு புகைப் பிடிக்கும் பிரச்சனை இருப்பதும் கண்டறியப்பட்டது, அவர்களில் 36,870 பேர் அதே காலகட்டத்தில் புகைபிடிப்பதை நிறுத்தும் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
பள்ளி மாணவர்களிடையே தடுப்பு மற்றும் புகைபிடிப்பதை நிறுத்தும் நடவடிக்கையாக செயல்படுத்தப்பட்ட KOTAK எனப்படும் புகைபிடிப்பில்லாத வாய்வழி சுகாதாரத் திட்டத்தின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை அமைந்துள்ளது என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் Dzulkefly Ahmad கூறினார்.
2019 முதல் கடந்த ஜூன் வரை மின்னணு சிகரெட்டுகள் அல்லது வேப்களைப் பயன்படுத்துவதால் ஏற்பட்ட ஐந்து இறப்புகளின் அறிக்கைகளையும் சுகாதார அமைச்சு பதிவு செய்துள்ளது.
வேப் பயன்பாட்டிற்கும் இறப்புக்கான காரணத்திற்கும் இடையே நேரடி தொடர்பை உறுதிப்படுத்துவது கடினம் என்றபோதிலும் இந்த சாதனத்தைப் பயன்படுத்திய தனிப்பட்டவர்களால் இறப்பு பதிவான சம்பவங்கள் உள்ளன.
கிடைக்கக்கூடிய வரையறுக்கப்பட்ட மருத்துவ சான்றுகள் மற்றும் சம்பந்தப்பட்ட இறப்புகளுக்கு பங்களிக்கும் இதர காரணங்களும் இருப்பதாக கோலாசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினருமான Dzulkefly கூறினார்.