
கோலாலம்பூர், ஆகஸ்ட் 13 – வரி செலுத்தத் தவறியவர்களுக்கு வெளிநாடு செல்ல தடைகள் விதிக்கப்படலாம் என்று உள்நாட்டு வருவாய் வாரியத்தின் (LHDN) வருவாய் வசூல் துறையின் தலைமை உதவி இயக்குநர் அசாஹருதீன் முகமது அலி (Azaharuddin Mohd Ali) தெரிவித்துள்ளார்.
சிரமங்களைத் தவிர்க்க பயணத் திட்டங்களை அமைக்கும் முன், மலேசிய குடிவரவு துறையின் (JIM) அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது MyTax போர்டல் மூலம் பயணக் கட்டுப்பாடுகளின் நிலையைப் பொதுமக்கள் சரிபார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்பும், வரி தொகையைச் செலுத்தாதவர்களுக்கு வருமான வரிச் சட்டத்தின் கீழ் தடைகள் விதிக்கப்படவுள்ளது.
வரி தொகை முழுமையாகச் செலுத்தபட்டால் தடையை ரத்து செய்ய இயலுமென்றும், ஒரு பகுதி தொகையைச் செலுத்தி, ஒப்பந்த தவணை அட்டவணையின்படி மீதமுள்ள தொகையைச் செலுத்தினால், அதிகபட்சம் மூன்று மாதங்கள் வரை தற்காலிக நிவாரணம் பரிசீலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 4 ஆம் தேதி முதல், MyTax போர்டலில் e-Travel Restrictions சேவையின் மூலம் ஆன்லைனில் தடையை நீக்க விண்ணப்பிக்கலாம் என்றும் தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் ஐந்து வேலை நாட்களுக்குள் செயல்படுத்தப்படும் என்றும் அறியப்படுகின்றது.
பயணக் கட்டுப்பாடுகள் வெறும் சட்டப் பிரச்சினை மட்டுமல்லாமல், நற்பெயர், தனிப்பட்ட உறவுகள் மற்றும் தொழில் வாழ்க்கையையும் பாதிக்கும் என்று அசாஹருதீன் எச்சரித்தார்.