
கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 – அரை நூற்றாண்டுக்கும் மேலாக விளையாட்டு, சமய நல்லிணக்கம், சமூக முன்னேற்றம் மற்றும் மனிதாபிமானத் தலைமைத்துவத்தில் தடம் பதித்த டத்தோ ஏ.வைத்திலிங்கத்தின் வாழ்க்கை பயணத்தை மையமாக வைத்து, மூத்த பதிக்கையாளர் ஏ கதிரேசன் கை வண்ணத்தில் வெளிவந்த “Vaithi – A Life of Service” என்ற புத்தகம் நேற்று கோலாலம்பூர் ரோயல் லேக் கிளப்பில் வெளியீடு கண்டது.
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநரும், சமூகத் தலைமைப்பணிகளில் டத்தோ வைத்தியுடன் நீண்டநாள் இணைந்து பயணித்தவருமான டத்தோ பி.சகாதேவன், இப்புத்தக வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
விழாவில், முன்னாள் சுகாதார அமைச்சர், முன்னாள் மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவர் மற்றும் மலேசிய இந்து சங்கத்தின் பாதுகாவலர் தான்ஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், விளையாட்டு புரவலன் தான்ஸ்ரீ டாக்டர் மணி ஜெகதீசன் ஆகியோர், நூலுக்கான முன்னுரைகளை எழுதியதோடு மட்டுமல்லாமல் விழாவில் கலந்து கொண்டு டத்தோ வைத்தியுடனான தங்களது நினைவுகளை பகிர்ந்துக் கொண்டனர்.
பிரதமர் துறையின் துணை அமைச்சர் ஒய்.பி. துவான் குலசேகரன், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களுடன் கலந்து கொண்டு டத்தோ வைத்திக்கு மரியாதை செலுத்தினர். மேலும் முன்னாள் துணை அமைச்சர், டாக்டர் ஒங் கியான் மிங், புத்தகத்திற்கு மதிப்புரை வழங்கி சிறப்பித்தார்.
32 அத்தியாயங்களால் ஆன இந்நூல், சிறுவயது முதல், ஹிந்து யூத் ஆர்கநைசேஷன், மலேசிய இந்து சங்கம், மலேசிய சமய ஆலோசனைச் சபை (MCCBCHST) போன்ற முக்கிய அமைப்புகளில் டத்தோ வைத்தி வகித்த தலைமைப் பொறுப்புகள் அனைத்தையும் சித்தரிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
இந்நிலையில், விழாவில் உரையாற்றிய டத்தோ அவர்கள் சேவையே தன வாழ்க்கையின் வழிகாட்டி எனவும் இந்நூல் தன்னுடைய கதையை மட்டுமல்லாமல் பல இதயங்களை ஒருங்கிணைக்கும் ஒரு பயணக் குறிப்பு என்பதனைக் குறிப்பிட்டார்.