
கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 – பிரதான நிலப்பகுதியிலிருந்து லங்காவி தீவுக்குப் பாலம் கட்டும் முன்மொழிவுக்கு மாற்றாக, எல்ஆர்டி அல்லது எம்ஆர்டி போன்ற ரயில் போக்குவரத்து திட்டங்களை வழங்க வேண்டிய அவசியத்தை, லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் சுஹைமி அப்துல்லா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
13வது மலேசிய திட்டம் குறித்து மக்களவையில் பேசிய அவர், ரயில் போக்குவரத்து சாலை நெரிசலை குறைப்பதோடு, லங்காவியின் அழகையும் மேம்படுத்தும் என தெரிவித்தார்.
லங்காவிக்கு ரயில் பாதை அமைத்தால், பிரதான நிலப்பகுதியிலிருந்து நீர் குழாய்கள் போன்ற உள்கட்டமைப்புகளையும் இணைக்க இயலும் என்று அறியப்படுகின்றது.
கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக லங்காவிக்கு நீர் விநியோகம் செய்யும் 37 கிலோமீட்டர் நீளமுள்ள நீர்மூழ்கிக் குழாய் தற்போது மோசமான நிலையில் உள்ளதென்றும், அதனைச் சரிசெய்வதற்கு பெரிய நிதி தேவைப்படும் என்பதனையும் அவர் விளக்கினார்.
இதற்கிடையில், இந்தத் திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ள, தென் கொரியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் கெடா அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.