Latestமலேசியா

சரியான முறையில் ஜாலூர் கெமிலாங்கை எப்படி உருவாக்குவது, பறக்க விடுவது? JAPEN விளக்கம்

புத்ராஜெயா, ஆகஸ்ட்-15 – தேசியக் கொடியான ஜாலூர் கெமிலாங்கின் கௌரவத்தை நிலை நாட்டுவதில் ஊடகங்களுக்கும் பெரும் பங்கிருப்பதாக, JAPEN எனப்படும் மலேசியத் தகவல் துறை தெரிவித்துள்ளது.

செய்திகளில் நாட்டுப் பற்றை ஊக்குவிப்பது, கொடியின் சின்னங்கள் கொண்டு வரும் அர்த்தங்களை பறைசாற்றுவதும் அவற்றிலடங்கும்.

அதே சமயம், தேசியக் கொடியின் சரியான பயன்பாடு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கடமையும் ஊடகங்களுக்கு இருப்பதை JAPEN சுட்டிக் காட்டியது.

“ஜாலூர் கெமிலாங் – தேசிய கௌரவம், ஊடகங்களின் கடமை” என்ற தலைப்பில் உள்ளூர் ஊடகங்களுக்கு புத்ராஜெயாவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு விளக்கமளிப்புக் கூட்டத்தில் இது வலியுறுத்தப்பட்டது.

JAPEN இயக்குநர் Mohd Sabri Abdullah, சடங்கு மற்றும் அனைத்துலக மாநாடுகள் துறையின் துணைத் தலைமைச் செயலாளர் Azman Ishak, JAPEN-னின் சமூக மேம்பாடு மற்றும் பொது உறவுப் பிரிவின் துணை இயக்குநர் Hazlianayati Sudan @Subdin ஆகியோர் அதில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்தனர்.

தேசியக் கொடி தவறாக பயன்படுத்தப்பட்டால் அதைப் பற்றி தொழில்முறை செய்தி வெளியிட்டு மக்களின் தவறுகளை சரிசெய்வதில் ஊடகங்களும் பங்கு பெற வேண்டும்.

அதே சமயம் ஊடகங்களின் கிராஃபிக் வரைகலை வடிவமைப்பாளர்கள், கொடியின் அதிகாரப்பூர்வ விதிகளை பின்பற்ற வேண்டும் — நிறங்கள் அல்லது வடிவமைப்பை மாற்றக்கூடாது.

கொடியை வெறும் அலங்காரமாகவோ அல்லது எதிர்மறை சின்னங்களுடன் இணைக்கவோ கூடாது. அதற்கு பதிலாக, தேசபக்தி மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வடிவமைப்புகளை உருவாக்க வேண்டும்.

கேலிச் சித்திரமாகவோ அல்லது அவமதிப்பு நோக்கத்திற்காகவோ கொடியைப் பயன்படுத்தக்கூடாது என்றும் நினைவுறுத்தப்பட்டது.

விளக்கக் கூட்டத்தில், ஜாலூர் கெமிலாஙின் கடுமையான தொழில்நுட்ப அம்சங்களும் மீண்டும் வலியுறுத்தப்பட்டன — மாறி மாறி வரும் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான 14 கோடுகள், 1:2 என்ற வீதத்தில் உயரம் மற்றும் நீள அளவு, குறிப்பிட்ட நிறக் குறியீடுகள் உள்ளிட்டவையும் அதிலடங்கும்.

முக்கியமாக AI மூலம் கொடி படங்களை உருவாக்குவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் எனவும் JAPEN எச்சரித்தது.

AI உருவாக்கும் கொடிகள் பல்வேறு தவறுகளைக் கொண்டிருப்பதை அண்மைய பல சம்பவங்களில் நாம் பார்த்திருக்கிறோம் என்பதால், கொடி விஷயத்தில் AI பயன்பாடு வேண்டாம் என அது கூறியது.

இவ்விளக்கக் கூட்டம், ஊடகங்களுக்கு நடத்தப்பட்டாலும், ஒவ்வொரு குடிமகனும் தேசியக் கொடியை மரியாதையுடன், சட்டப்படி காட்சிப்படுத்துவது ஒரு குடிமைப் பொறுப்பு என்பதை நினைவூட்டியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!