
கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – வெறும் 12 வயது மட்டுமே நிரம்பிய சிறுமி ஒருவர், வாட்ஸ்அப் செயலியின் மூலம் ஆபாசப் பொருட்களை விற்பனை செய்யும் ‘வணிகத்தை’ முன்னெடுத்துள்ளதை போலீசார் கண்டறிந்துள்ளனர் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயில் மக்களவையில் தெரிவித்தார்.
இந்த வலைத்தளத்தை உருவாக்கிய அச்சிறுமி தனது நான்கு நண்பர்களுடன் இணைந்து செயல்பட்டதாகவும் அவர் உருவாக்கிய புலன குழுவில் 762 பேர் உறுப்பினர்களாக இருந்தனர் என்றும் அறியப்படுகின்றது.
அக்குழுவிலிருந்த அனைவரும் தங்களின் உடல் பாகங்களைப் படம் எடுத்து விற்பனை செய்து வந்தனர் என்று சைஃபுதீன் கூறினார். சம்பந்தப்பட்ட சிறுமி பெற்றோர்களின் வருமானத்தை விட அதிகம் சம்பாதித்ததால் பள்ளியை விட்டு வெளியேறியதாகவும், இதனால் நிலைமை மிகுந்த கவலைக்கிடமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இத்தகைய குற்றங்களுக்கு தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அக்குற்றத்தில் ஈடுபடும் குழந்தைகளை கையாளும் போது சட்ட ரீதியான சிக்கல்கள் எழுவதாகவும் அறியப்படுகின்றது.
இதுபோன்ற வழக்குகளை கையாளும் போது பல்வேறு நிறுவனங்களின் ஆலோசனைகளையும் கருத்துகளையும் பெற வேண்டியது அவசியம் எனும் நிலைமை தெளிவாக தெரிகிறது.