
ஷா அலாம், ஆக 26 – மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழக (UTM) PALAPES எனப்படும் சேமப்படை அதிகாரி பயிற்சிப் படை பயிற்சியாளரான காலஞ்சென்ற Syamsul Haris Shamsudin உடலை இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டி எடுப்பதற்கு ஷாஅலாம் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இறந்தவரின் தாயார் Ummu Haiman Bee சமர்ப்பித்த விண்ணப்பத்தை விசாரித்த நீதிபதி Bhupindar Sing Gurcharan Singh Preet இந்த உத்தரவைப் பிறப்பித்தார்..
உடல் அகற்றப்பட்ட 14 நாட்களுக்குள் பிரேத பரிசோதனை செயல்முறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விண்ணப்பதாரர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் டத்தோ Naran Singh தெரிவித்தார்.
விண்ணப்பதாரரால் நியமிக்கப்பட்ட தடயவியல் நிபுணர் டத்தோ ஸ்ரீ டாக்டர் Bhupindar Sing மற்றும் விண்ணப்பதாரரின் பிரதிநிதி முன்னிலையில், கோலாலம்பூர் மருத்துவமனையின் தடயவியல் நிபுணரால் இரண்டாவது பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்..
பிரேத பரிசோதனை முடிவுகளின் முழு அறிக்கையையும் நியாயமான காலத்திற்குள் தயாரித்து, அதன் நகலை விண்ணப்பதாரரின் வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.