
ஜோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-27 – நாட்டில் உயர் கல்வி வாய்ப்பு சமச்சீராக வழங்கப்பட வேண்டும்; குறிப்பாக பூமிபுத்ரா மாணவர்களுக்கு 60 விழுக்காடும், பூமிபுத்ரா அல்லாதோருக்கு 40 விழுக்காடும் ஒதுக்கப்பட வேண்டுமென, புக்கிட் கெளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பால் சிங் வலியுறுத்தியுள்ளார்.
கல்வியில் வெற்றியடைய அனைத்து மலேசியப் பிள்ளைகளுக்கும் நியாயமான வாய்ப்பு அவசியமென்றார் அவர்.
2002-ஆம் ஆண்டு பல்கலைக்கழக மேற்படிப்புக் கிடைத்த பூமிபுத்ராக்களின் எண்ணிக்கை 81.9 விழுக்காடாகவும், பூமிபுத்ரா அல்லாத மாணவர்கள் வெறும் 18.1 விழுக்காடாக மட்டுமே இருந்தததையும் அவர் சுட்டிக் காட்டினார்.
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் STPM 2024 சிறந்த மாணவர்களுக்கான அங்கீகார விழா மற்றும் உயர் கல்விக் கூட மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி வழங்கும் விழாவைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில், ராம் கர்பால் அவ்வாறு சொன்னார்.
அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவரும், அதன் கல்வி மற்றும் சமூக நலன் செயற்குழுத் தலைவருமான செனட்டர் Dr. லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலமும் அதில் கலந்துகொண்டார்.
2024 STPM தேர்வில் 3.5 CGPA புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு அந்நிகழ்வில் தலா 500 ரிங்கிட் வழங்கப்பட்டது.
அதே சமயம் 4 flat தேர்ச்சியைப் பெற்ற 3 மிக சிறந்த 3 மாணவர்களுக்கு தலா 1,500 ரிங்கிட் சன்மானம் வழங்கப்பட்டது.
இவ்வேளையில், பொது மற்றும் தனியார் உயர் கல்விக் கூடங்களில் டிப்ளோமான படிக்கும் 3 மாணவர்களுக்கு தலா 500 ரிங்கிட்டும், இளங்கலைப் பட்டப் படிப்பை மேற்கொள்ளும் 18 மாணவர்களுக்கு தலா 1,000 ரிங்கிட்டும் கல்வி நிதியுதவி ஒப்படைக்கப்பட்டன.
இது ஒரு சிறியத் தொகையாக இருந்தாலும், நமது பிள்ளைகளின் அடைவுநிலையை அங்கீகரிக்கும் நோக்கில் இந்த அங்கீகார விழா நடத்தப்பட்டதாக, லிங்கேஷ்வரன் கூறினார்.
அறப்பணி வாரியத்தின் தலைவர் RSN ராயரும் அந்நிகழ்வில் பங்கேற்றார்.