
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-28 – சிறுநீரக தானங்களின் பற்றாக்குறை கடுமையாக உள்ளதால், உயிர்கள் மட்டுமல்லாமல் அரசாங்கத்திற்கும் பெரும் நிதிச் சுமை ஏற்படுவதை கருத்தில் கொண்டு, 1974 மனித திசுக்கள் சட்டத்தில் உடனடி திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.
செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம் அதனை வலியுறுத்தியுள்ளார். ஒவ்வோர் ஆண்டும் சுமார் 10,000 புதிய சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளுக்கு டையலிசிஸ் தேவைப்படுகிறது.
இதன் செலவு 2030 வாக்கில் வருடத்திற்கு RM4 பில்லியன் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. 2016-ல் மட்டும் RM1.65 பில்லியன் செலவிடப்பட்டது; அதில் 94% டையலிசிஸுக்காக என்றார் அவர்.
கடந்த பிப்ரவரி வரைக்குமான நிலவரப்படி 10,239 பேர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர்.
எனவே, opt-out consent முறை மற்றும் எளிமையான தானதாரர் பதிவு செயல்முறைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், பினாங்கு சுங்கை பாக்காப் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநருமான Dr லிங்கேஷ்வரன் வலியுறுத்தினார்.
அதேசமயம், சிறுநீரக தானம் செய்பவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் தெளிவான, நெறிமுறை மற்றும் சட்ட பாதுகாப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றார் அவர்.