
ஈப்போ, செப்டம்பர்-1 – நேற்று காலை ஈப்போவில் நடைபெற்ற தேசிய தின அணிவகுப்பின் போது திடீரென பேராக் சுல்தானை நோக்கி ஓடி பரபரப்பை ஏற்படுத்திய பெண் கைதாகியுள்ளார்.
பிரமுகர்கள் மேடையில் இரண்டாவது வரிசையில் நின்றிருந்த அப்பெண் யாரும் எதிர்பாராத வகையில் சட்டென சுல்தான் நஸ்ரின் ஷாவை நோக்கி ஓடி, பின்னாலிருந்து அவரை கெட்டியாக பிடித்துகொண்டார்.
இதனால் மேடையிலிருந்தவர்கள் உட்பட பொது மக்களும் ஒரு கணம் திகைத்துப் போயினர்.
எனினும் பாதுகாவலர்கள் உடனடியாகச் சென்று அப்பெண்ணைப் பிடித்து மேடையை விட்டு இழுத்துச் சென்றனர்.
41 வயது அம்மாது பின்னர் விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார்.
இவ்வேளையில், அச்சம்பவத்திற்கு இனவாத சாயம் பூசி நிலைமையை மோசமாக்க வேண்டாமென, DAP இளைஞர் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.
அது போன்ற பேச்சுகள் வாட்சப் மற்றும் சாமூக ஊடகங்களில் பரவி வருவது ஏமாற்றமளிப்பதாக, அதன் தலைவர் Woo Kah Leong கூறினார்.
அப்பெண் தூடோங் அணியவில்லை என்பதை வைத்து, ஒரு குறிப்பிட்ட ஓர் இனத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற அனுமானத்தில் இனவாதமாகப் பேசப்படுகிறது.
தேசிய தினம் அதுவுமாக ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பேசுவது முறையல்ல என பாசீர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
எது எப்படி இருப்பினும் மாநில ஆட்சியாளர் மீதான தாக்குதல் முயற்சி கடுமையானது; அதை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் சொன்னார்.