
கோலாலாம்பூர், செப்டம்பர்-3- MRSM எனப்படும் மாரா இளநிலை அறிவியல் கல்லூரியில் இணைய விரும்பும் மாணவர்கள், செப்டம்பர் 7-ஆம் தேதிக்குள் அதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அதே சமயம் SBP எனப்படும் முழு தங்கும் வசதியுடன் கூடிய பள்ளிகளுக்கான விண்ணப்பங்களுக்கும் அதே செப்டம்பர் 7-ஆம் தேதியே கடைசி நாளாகும்.
எனவே, தகுதியுடைய இந்திய மாணவர்கள் கடைசி நேரம் வரை காத்திராமல் இவ்வாய்ப்பை நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படி இந்திய அரசு சாரா அமைப்புகளில் கூட்டமைப்பான ACE-யின் ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் கந்தசுவாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
MRSM கல்லூரிகள் MARA நிறுவனத்தின் கீழும் SBP பள்ளிகள் கல்வியமைச்சின் கீழும் செயல்படுவதாகும். இவ்விரு கல்வி நிறுவனங்களிலும் இணைந்து பயில்வதற்கு பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
எனவே, இவ்வாண்டு தேசியப் பள்ளி, தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளில் ஆறாமாண்டு படிக்கும் மாணவர்களும், தேசிய இடைநிலைப் பள்ளிகளில் மூன்றாமாண்டில் படிக்கும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இவர்கள் அடுத்தாண்டு முதலாம் படிவத்திலும் நான்காம் படிவத்திலும் அங்குப் படிப்பைத் தொடருவர். மிகச் சிறந்த கல்வித் தேர்ச்சியை வைத்திருப்பது, புறப்பாட நடவடிக்கைகளில் சிறந்து விளங்குவது போன்ற நிபந்தனைகளுடன், குறைந்த வருமானம் கொண்ட B40 குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இதில் முன்னுரிமை வழங்கப்படும்.
MRSM கல்லூரிகள் மற்றும் SBP பள்ளிகளில் படிப்பதன் சிறப்புகளையும் குணசேகரன் விவரித்தார். மாணவர்கள் ஒரு விண்ணப்பம் செய்தால் போதுமானது; கடந்தாண்டுகளைப் போல MRSM- SBP என தனித்தனி விண்ணப்பங்கள் இவ்வாண்டு தேவையில்லை என்றார் அவர்.
இம்முறையும் Pentaksiran Kemasukan Sekolah Khusus (PKSK) என்ற நுழைவுத் தேர்வில் மாணவர்கள் கட்டாயம் அமர வேண்டும்; ஆனால்அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன: அதாவது இரு கல்வி நிறுவனங்களுக்கும் சேர்த்து ஒரு நுழைவுத் தேர்வினை எழுதினாலே போதுமானது.
ஆகவே, விண்ணப்பிக்க தகுதி பெற்ற மாணவர்கள் spskt1.moe.gov.my என்ற அகப்பக்க முகவரியில் அடுத்தாண்டுக்கான முதலாம் படிவத்திற்கும், spskt4.moe.gov.my அடுத்தாண்டிற்கான நான்காம் படிவத்திற்கும் விண்ணப்பிக்கலாம் என அவர் குறிப்பிட்டார்.