
கோலாலம்பூர், செப்டம்பர்-8- பெர்சாத்து தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசினை, 11-ஆவது பிரதமர் வேட்பாளராக அக்கட்சி அறிவித்துள்ளது. நேற்றைய பொதுப் பேரவை முடிவில் அத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
கட்சியின் தலைவராக முஹிடின் நீடிக்கவும் பொதுப்பேரவை அமோக ஆதரவை வெளிப்படுத்தியதாக, பெர்சாத்து பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ அஸ்மின் அலி கூறினார்.
முன்னதாக, கொள்கையுரையின் போது, தம்மை பதவியிலிருந்து விலக்க கட்சிக்குள்ளேயே ஒரு சிலரால் கையெழுத்து வேட்டை நடப்பதாக முஹிடின் குற்றம் சாட்டியதால், மாநாட்டில் சிறிய சலசலப்பு ஏற்பட்டது.
இவ்வேளையில், பிரதமர் வேட்பாளர் உட்பட பெரிக்காத்தான் நேஷனலின் முக்கிய முடிவுகள் கூட்டணிக் கட்சிகளை கலந்தாலோசிக்காமல் எடுக்கப்படக் கூடாது என, பாஸ் கட்சியின் தேர்தல் இயக்குநர் டத்தோ ஸ்ரீ சனுசி நோர் பெர்சாத்துவை நினைவுறுத்தியுள்ளார்.
வரக்கூடிய சபா சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு, முதல்வர் வேட்பாளர் போன்ற முடிவுகளிலும் பெர்சாத்து தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது.
கூட்டணி தர்மம் எப்போதும் காக்கப்பட வேண்டுமென, கெடா மந்திரி பெசாருமான சனுசி சொன்னார். 16-ஆவது பொதுத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளர் தொடர்பில் பெரிக்காத்தானில் ஓராண்டாகவே புகைச்சல் நிலவுகிறது.
முஹிடின் தான் அடுத்தப் பிரதமர் என்ற ரீதியில் பெர்சாத்து வந்தாலும், புத்ராஜெயாவைக் கைப்பற்றியப் பிறகே எந்தவொரு முடிவும் எடுக்கப்படும் என, பாஸ் சமயத் தலைவர் Hashim Jasin திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.
2020 முதல் 2021 வரை 8-ஆவது பிரதமராக இருந்தவரான 78 வயது முஹிடின், 15-ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு கிட்டத்தட்ட மீண்டும் பிரதமர் பதவியை நெருங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.