
கோலாலாம்பூர், செப்டம்பர்-8 – STR எனப்படும் ரஹ்மா ரொக்க உதவி நிதி பெறுநர்களில் இந்தியர்கள் சுமார் 675,000 பேர் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு STR மற்றும் மற்றும் SARA உதவித் திட்டத்தின் வாயிலாக அவர்களுக்கு 970 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டதாக, செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம் கேட்ட கேள்விக்கு, மேலவையில் அமைச்சு பதிலளித்தது.
இது, கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட 670 மில்லியன் ரிங்கிட் நிதியை விட 45 விழுக்காடு அல்லது 300 மில்லியன் ரிங்கிட் அதிகமாகும்;
2022-ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தின் மலேசியக் குடும்ப உதவித் (Bantuan Keluarga Malaysia) திட்டத்தின் கீழ் இந்தியர்கள் பெற்ற உதவியை விடவும் இத்தொகை பெரியதாகும்.
அப்போது 578 மில்லியன் ரிங்கிட் அச்சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டதை அமைச்சு சுட்டிக் காட்டியது.
வசதி குறைந்த மக்கள் தங்கள் வாழ்க்கைச் செலவின உயர்வைச் சமாளிக்க உதவும் இதுபோன்ற உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதை மடானி அரசாங்கம் உறுதிச் செய்யுமென அது கூறிற்று.