Latestமலேசியா

STPM தேர்வில் 4.0 CGPA தேர்ச்சிப் பெற்ற மாணவருக்கு மலாயாப் பல்கலைக்கழகத்தில் இடம் மறுப்பு; இது நியாயமா? – வீ கா சியோங் கேள்வி

கோலாலம்பூர், செப்டம்பர்-9 – STPM தேர்வில் 4.0 CGPA புள்ளிகளுடன் 100 விழுக்காட்டுத் தேர்ச்சியும், புறப்பாட நடவடிக்கைகளில் 99.9% தேர்ச்சியும் பெற்ற ஒரு மாணவருக்கு, மலாயாப் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் துறையில் பட்டப்படிப்பு மேற்கொள்ள இடம் மறுக்கப்பட்டுள்ளது.

ஒரு மிகச் சிறந்த மாணவருக்கே இந்நிலை என்றால், UPU எனப்படும் அரசாங்கப் பல்கலைக் கழகங்களுக்கான நுழைவு முறை எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை தெரிந்துக் கொள்ளலாம் என, ம.சீ.ச தலைவர் டத்தோ ஸ்ரீ Dr வீ கா சியோங் கடுமையாக சாடியுள்ளார்.

பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமைச் சேர்ந்த 20 வயது Edward Wong என்பவரே பாதிக்கப்பட்ட மாணவராவார்.

பொது பல்கலைக் கழங்களில் அவர் படிக்க விரும்பிய கணக்கியல் பட்டப்படிப்பு கிடைக்கவில்லை; முதல் தேர்வாக மலாயாப் பல்கலைக்கழகத்தை அவர் தேர்ந்தெடுத்திருந்தார்.

ஆனால் கிடைத்ததோ, மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்தில் ஏதோ ஒரு நிர்வாகப் பட்டப்படிப்பே…

தேர்வில் 4 flat-டும் புறப்பாடங்களில் 99.9% தேர்ச்சிப் பெற்றதுமே போதவில்லை என்றால், இனி எந்தத் தகுதியைத் தான் மாணவர்கள் கொண்டிருக்க வேண்டும் என வீ கா சியோங் கேள்வி எழுப்பினார்.

இது UPU நுழைவு முறையில் காணப்படும் கடுமையான பலவீனங்களைப் பிரதிபலிப்பதாக, நேற்று இயங்கலை வாயிலாக நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் சுட்டிக் காட்டினார்.

UPU வழியாக இடம் கிடைக்காத Edward, பின்னர் அதே UM-மில் கணக்கியல் துறையில் பட்டப்படிப்பு மேற்கொள்ள பணம் கட்டி படிக்கும் திறந்த சேர்க்கை முறைக்கு விண்ணப்பித்துள்ளார்.

அதில் உடனடியாக அவருக்கு இடம் கிடைத்துள்ளது.

ஆனால், 83,800 ரிங்கிட் வரையில் அவர் டியூஷன் கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கும்; இதுவே UPU வழியாக இடம் கிடைத்திருந்தால் செலவு வெறும் 8,300 ரிங்கிட்டோடு முடிந்திருக்கும்.

UPU-வால் தகுதியில்லாதவர் என முடிவுச் செய்யப்பட்டவருக்கு, 10 மடங்கு அதிகமான கட்டணத்தை உட்படுத்திய திறந்த சேர்க்கையில் மட்டும் வாய்ப்புக் கிடைத்தது எப்படி வீ கா சியோங் கேட்டார்.

இது குறித்து உயர் கல்வி அமைச்சு உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!