
காட்மண்டு, செப்டம்பர்-10 – பேரளவிலான ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறியதில், வரலாறு காணாத அளவுக்கு நேப்பாளமே பற்றி எரிகிறது.
நாடாளுமன்றம் உள்ளிட்ட அரசாங்கக் கட்டடங்களையும் பிரதமர் உட்பட அரசியல்வாதிகளின் வீடுகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால், வேறு வழியின்றி பிரதமர் Khadga Prasad Sharma Oli பதவி விலகியுள்ளார்.
10 ஆண்டு காலமாக பிரதமராக இருக்கும் அவரின் சொந்த வீட்டையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்து, சொத்துக்களை சேதப்படுத்தினர்.
இதையடுத்து Sharma Oli உட்பட அமைச்சர்களையும் ஹெலிகாப்டர்கள் மூலமாக இராணுவம் பாதுகாப்பாக வெளியேற்றியது.
முன்னதாக, முன்னாள் பிரதமர் Jhalanath Khanal-லின் வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டதில், அவரின்
மனைவி Rajyalaxmi Chitrakar பரிதாபமாக உயிரிழந்தார்.
எரியும் வீட்டிலிருந்து அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
இவ்வேளையில் நேப்பாள நிதியமைச்சர் Bishnu Paudel ஆர்ப்பாட்டக்காரர்களால் துரத்தப்பட்டு, சரமாரியாகத் தாக்கப்பட்டார்.
உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவர் சாலைகளில் புகுந்து தலைத்தெறிக்க ஓடுவதும், ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை சுற்றி வளைத்து எட்டி உதைக்கும் வீடியோக்களும் வைரலாகியுள்ளன.
முன்னதாக தலைநகர் காட்மண்டுவில் உள்ள Tribuvan அனைத்துலக விமான நிலையமும் பாதுகாப்புக் கருதி தற்காலிகமாக மூடப்பட்டது.
சமூக ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதால் வெடித்த சாலை ஆர்ப்பாட்டம், பின்னர் ஊழல் எதிர்ப்பு மற்றும் அரசாங்கத்தை மாற்றும் போராட்டமாக மாறி தற்போது வன்முறையாக வெடித்துள்ளது.
பாதுகாப்புப் படைகளுடனான மோதலில் இதுவரை 19 பேர் பலியாகியுள்ளதால், ஆர்ப்பாட்டக்காரர்களின் கோபம் அடங்காமல் அந்தத் தெற்காசிய நாடே கடும் அமளியில் மூழ்கியுள்ளது.
இது அண்டை நாடான இந்தியாவையும் அனத்துலக சமூகத்தையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.