
ஜோர்ஜ்டவுன், செப்டம்பர்-10 – மலாய், சீன, இந்திய தாள வாத்தியங்களை வாசிக்கும் 10,000க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் சங்கமிக்கும் நிகழ்வாக, பினாங்கில் 2-ஆவது ஓரியண்டல் டிரம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
தேசிய பள்ளிகள், சீனப் பள்ளிகள், தமிழ்ப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்களை உள்ளடக்கிய பங்கேற்பார்கள் பத்து கவான் அரங்கில் கூடுவார்கள் என, BSY எனப்படும் கலாச்சார மற்றும் கலை ஆராய்ச்சி அமைப்பின் அன்னை பாய் ஷி யின் (Bai Shi Yin) அறிவித்தார்.
நாட்டின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் அடையாளமாக இந்த மதிப்புமிக்க நிகழ்ச்சியின் இணை அமைப்பாளராக இருப்பதில் பெருமைப்படுவதாக அவர் சொன்னார்.
பினாங்கு, கெடா மற்றும் சிலாங்கூரைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த 4,000க்கும் மேற்பட்ட மாணவர்களும் இதில் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளதாக, இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சி, கலை மற்றும் கலாச்சாரத்தை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், பல்வேறு சமூகங்களிடையே ஒற்றுமை உணர்வை வளர்ப்பதற்கான ஒரு முக்கியமான தளமாகவும் உள்ளது.
கல்வி அமைச்சு, பினாங்கு மாநில அரசு, தேசியப் போலீஸ் படை, ரேலா தன்னார்வலர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் நெருங்கிய ஒத்துழைப்புக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இந்த 2-ஆவது ஓரியண்டல் டிரம் நிகழ்ச்சி ஒரு பெரிய வெற்றியாக இருக்கும்…
மக்களின் ஒற்றுமையின் அடையாளமாக புதிய வரலாற்றை உருவாக்கும் மற்றும் எதிர்கால சந்ததியினர் பெருமைப்படக்கூடிய ஒரு கலாச்சார மரபை விட்டுச்செல்லும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.