
ஜோகூர் பாரு- செப் 12 – இரண்டு வாரங்களுக்குள் போலி பார்சல் மற்றும் முதலீட்டு மோசடி சம்பவங்களில் ஜோகூரைச் சேர்ந்த இரு மருத்துவர்கள் கிட்டத்தட்ட 2.8 மில்லியன் ரிங்கிட் இழந்தனர்.
அண்மையில் 20 வயதுடைய ஒரு பெண் மருத்துவர், தடைசெய்யப்பட்ட பொருட்களுடன் கூடிய பார்சல் வைத்திருப்பதாகக் கூறிய பொருட்கள் பட்டுவாடா செய்யும் நிறுவனத்திடமிருந்து அழைப்பு வந்ததைத் தொடர்ந்து இந்த மோசடிக்கு உள்ளானார்.
அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அந்த மருத்துவரிடம் , சரவாக்கைச் சேர்ந்த போலீஸ்காரர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு நபர், விசாரணைகளில் உதவத் தவறினால் அவரது வங்கிக் கணக்கை முடக்குவதாக மிரட்டியபோது அந்த மருத்துவர் அச்சத்திற்குள்ளானார்.
அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் செப்டம்பர் தொடக்கம்வரை இரண்டு வார காலத்திற்குள் மொத்தம் 150,000 ரிங்கிட் பணத்தை ஐந்து வெவ்வேறு கணக்குகளுக்கு பட்டுவாடா செய்துள்ளார்.
இந்த பணத்தை மோசடி பேர்வழி திருப்பித் தர மறுத்தபோதுதான் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அந்த மருத்துவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
மற்றொரு சம்பவத்தில் 45 வயது மருத்துவர் கூடுதல் வருமானம் கிடைக்கும் என உறுதியளிக்கப்பட்ட வெளிநாட்டு இணைய முதலீட்டுத் திட்டத்தால் ஏமாற்றப்பட்டதால் 2.6 மில்லியன் ரிங்கிட்டை இழந்தார்.
மே மாதம் 25 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம்தேதிவரை பாதிக்கப்பட்டவர் வெவ்வேறு வங்கிகளின் எட்டு கணக்குகளுக்கு மொத்தம் 56 பரிவர்த்தனைகளைச் செய்து ஏமாந்துள்ளார்.
கண்காணிப்பு விண்ணப்பத்தைப் பயன்படுத்தி பணத்தை எடுக்க முடியாததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த மருத்துவர் போலீசில் புகார் செய்ததாக ஜோகூர் பாரு தென் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் ரவ்ப் செலமாட்
( Raub Selamat ) தெரிவித்தார்.
மற்றொரு சம்பவத்தில் சுற்றுலா வழிகாட்டி ஒருவரும் மோசாடி திட்டத்தில் 125,000 ரிங்கிட்டை இழந்துள்ளார்.