
செபராங் ஜெயா, செப்டம்பர்-15 – ம.இ.கா மகளிர் பிரிவின் மூத்த தலைவிகளின் சேவையும் அர்ப்பணிப்பும் போற்றத்தக்கது என, அதன் தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் புகழாரம் சூட்டியுள்ளார்.
கட்சியைக் கட்டுக் கோப்பாக வைத்திருக்க உதவியதில் அவர்களின் பங்கு அளப்பரியதாகும்; அடுத்தத் தலைமுறைக்கு வழிவிட்டு ஒதுங்கினாலும், அவர்கள் அமைத்துக் கொடுத்த பாதை இன்றைய மகளிர் தலைவிகளுக்கும் பயனுள்ளதாக இருப்பதாக அவர் பாராட்டினார்.
பினாங்கு, கெடா, பெர்லிஸ் மாநில ம.இ.கா முன்னாள் மகளிர் தலைவிகள் ஒன்றுகூடும் நிகழ்ச்சியில் உரையாற்றிய போது விக்னேஸ்வரன் அவ்வாறு சொன்னார்.
பினாங்கு செபராங் ஜெயா, The Light ஹோட்டலில் நடைபெற்ற அந்நிகழ்வை, ம.இகா மகளிள் முன்னாள் சேவையாளர்கள் செயற்குழு ஏற்பாடு செய்திருந்தது.
ம.இ.கா தற்போது சவால்மிக்க காலக்கட்டத்தில் இருந்தபோதிலும், துவண்டு விடாமல் இது போன்ற நிகழ்வை நடத்தி மகளிர் பிரிவை உற்சாகத்தில் வைக்கும் மூத்த தலைவிகளின் எண்ணத்தை விக்னேஸ்வரன் புகழ்ந்தார்.
தேசிய உதவித் தலைவர் டத்தோ எம். அசோஜன், தேசிய மகளிர் பிரிவுத் தலைவி சரஸ்வதி நல்லத்தம்பி, முன்னாள் பொறுப்பாளர்களான டத்தின் கோமளா தேவி கிருஷ்ண மூர்த்தி, கமலா கணபதி உள்ளிட்டோர் அதில் பங்கேற்றனர்.
3 வட மாநில ம.இ.கா மூத்தத் தலைவிகள் ஒன்றுகூடி நட்பு பாராட்டியதோடு, கட்சி வலுவுடன் திகழ தங்களின் பிளவுப்படாத ஆதரவையும் கடப்பாட்டையும் மறுஉறுதிப்படுத்தினர்.