
காஜாங், செப்டம்பர்-19 – சிலாங்கூர், செமஞேவில் உள்ள ஒரு பேரங்காடியில் வெளிநாட்டினருக்கு பேக்கேட் சமையல் எண்ணெய் விற்கப்பட்டதால் ஆத்திரமடைந்த ஆடவர், அங்கிருந்த பெண் மேலாளரைத் தகாத வார்த்தைகளால் திட்டித் தாக்கியச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
செப்டம்பர் 14-ஆம் தேதி பண்டார் ரிஞ்சிங்கில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக, பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகார் செய்தார்.
அவ்வாடவரை ஆசுவாசப்படுத்த முயன்ற போது, பின்னாலிருந்து அவர் தன் கையால் தலையில் தாக்கி விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றதாக அப்பெண் கூறினார்.
இந்நிலையில், 38 வயது சந்தேக நபர் செவ்வாய்க்கிழமையன்று சரணடைந்ததை, காஜாங் போலீஸ் தலைவர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் உறுதிப்படுத்தினார்.
விசாரணைக்கு ஒரு நாள் தடுத்து வைக்கப்பட்ட பின், போலீஸ் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.
இன்று காலை பாங்கி நீதிமன்றத்தில் அவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது.