
கோலாலம்பூர், செப்டம்பர்-21 ,
2029-ஆம் ஆண்டுக்குள் தனது சொந்த ராக்கெட் ஏவுதளத்தைக் கொண்ட தென்கிழக்காசியாவின் முதல் நாடாக மலேசியா உருவாகவுள்ளது.
பஹாங், சரவாக், சபா ஆகிய மாநிலங்களில் 3 இடங்கள் ஏவுதளத்திற்கான பரிசீலனைப் பட்டியலில் இருப்பதாக, மலேசிய விண்வெளி நிறுவனம் கூறியது.
3 நிறுவனங்கள் இந்த ஏவுதளத் திட்டத்தில் ஆர்வம் காட்டுகின்றன; அவற்றில் ஒன்று முழுமையான சாத்தியக் கழிவு அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளதாக, நிறுவனத் தலைமை இயக்குநர் அஸ்லி காமில் நாபியா (Azli Kamil Napiah) கூறினார்.
இது, அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்ளும் கூட்டுத் திட்டமாகும்.
இதில் விண்வெளி நகரம் உருவாக்குதல், மலேசியாவின் சொந்த செயற்கைக்கோளை உருவாக்குதல் மற்றும் ராக்கெட் ஏவுதல் சேவைகளும் அடங்கும் என்றார் அவர்.
முதலில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து, மாநில அரசின் அனுமதியையும் பெற வேண்டும்.
அனைத்து ஒப்புதல்களும் கிடைத்த பிறகு, 2029 தொடக்கத்தில் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
மலேசியாவின் நிலப்பரப்பு சமவெளியில் அமைந்துள்ளதால் எரிபொருள் செலவு குறைந்து, அதிக திறனுடன் ராக்கெட் ஏவுதல் சாத்தியமாகும் என்றார் அவர்.
இத்திட்டம் 10 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான உள்நாட்டு உற்பத்தி மதிப்பை உயர்த்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.