
ஷா ஆலாம், செப்டம்பர்-21 – KUSKOP எனப்படும் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு, இந்தியச் சமூகக் கூட்டுறவுக் கழகங்களை வலுப்படுத்த ஏதுவாக, RM2.4 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நிதியுதவி மற்றும் மானியங்களை வழங்கியுள்ளது.
அவற்றில் RM117,500 ரிங்கிட் “பக்தி மடானி” முன்னெடுப்புக்காகவும், RM2 மில்லியன் ரிங்கிட் சுழல் மூலதன நிதிக்காகவும் வழங்கப்பட்டதாக, துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும் RM356,224 ரிங்கிட் நிதி, SME Corp Malaysia வழியாக, I-BAP திட்டத்தின் கீழ் 6 இந்தியத் தொழில்முனைவோர் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
ஷா ஆலாம் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ‘2025 சிலாங்கூர் கூட்டுறவு மற்றும் தொழில்முனைவு மேம்பாட்டு திட்ட’ அந்நிகழ்வில் 350-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சிலாங்கூரில் தற்போது 2,189 கூட்டுறவுகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன; அவற்றில் 121 சங்கங்கள் இந்தியச் சமூகக் கூட்டுறவுகள் ஆகும்; அவற்றின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 52,882 பேர் என ரமணன் தெரிவித்தார்.
இக்கூட்டுறவுக் கழகங்கள் RM210 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்து வளர்ச்சியையும், RM134 மில்லியன் ரிங்கிட் பங்குகள் மற்றும் சந்தா வசூலையும் கொண்டுள்ளன.
இந்தியச் சமூகக் கூட்டுறவுக் கழகங்கள் RM12 மில்லியன் ரிங்கிட் வருவாய் ஈட்டியுள்ளதாகக் கூறிய துணையமைச்சர், இது KUSKOP மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டால் மேலும் அதிகரிக்கலாம் என்றார்.
இவ்வேளையில், கூட்டுறவுக் கழகங்கள் டிஜிட்டல் பயன்பாடுகள் மூலம் குறைந்த செலவில், விரிந்த சந்தைகளில் தங்களது தயாரிப்புகளை விளம்பரப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
டிஜிட்டல் முறைகள், அதிகச் செலவுகளைக் கொண்ட பாரம்பரிய முறைகளுக்கு சிறந்த மாற்றாக இருக்கும் என்றார் அவர்.