
கோலாலம்பூர், செப்டம்பர்-21 – பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு பாஸ் கட்சி தலைமையேற்பதில் தம்மைப் பொருத்தவரை எந்தப் பிரச்னையுமில்லை என்கிறார், பெர்சாத்து கட்சியின் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ ரோனல்ட் கியாண்டி.
தான் ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான முந்தைய பெரிக்காத்தான் அரசாங்கத்தில் பாஸ் கட்சியினரும் அமைச்சர்களாகப் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ளதால், அவர்களின் தலைமைத்துவ ஆற்றல் குறித்து கேள்வி எழுப்ப வேண்டிய அவசியமில்லை.
வாய்ப்பு கிடைத்தால் எந்தக் கட்சித் தலைவரும் தங்கள் திறமையை நிரூபிக்க முடியும் என்றார் அவர்.
எனினும், பெரிக்காத்தானை பாஸ் கட்சி வழி நடத்தும் பரிந்துரை குறித்த இறுதி முடிவு, அந்த எதிர்கட்சி கூட்டணியின் உச்சமன்றத்தை பொருத்தது என, சபா பெலூரான் நாடாளுமன்ற உறுப்பினருமான கியாண்டி சொன்னார்.
கடந்த வாரம் நடைபெற்ற பாஸ் கட்சியின் ஆண்டு பேராளர் மாநாட்டில், அடுத்த பொதுத் தேர்தலில் பெரிக்காத்தானை பாஸ் கட்சியே வழிநடத்த வேண்டுமென்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
அதுவொன்றும் அதிர்ச்சிக்குரிய விஷயம் அல்ல எனக் குறிப்பிட்ட கியாண்டி, ஒவ்வொரு கட்சியும் தங்களது ஆண்டு பொதுக்கூட்டங்களில் இதுபோன்ற தீர்மானங்களை நிறைவேற்றுவது வழக்கமானது தான் என்றார்.
யார் எது வேண்டுமானாலும் கூறலாம்; ஆனால் கடைசியில் ஒற்றுமையான ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெரிக்காத்தானை யார் வழிநடத்த வேண்டும் என்பதை அதன் உச்ச மன்றமே தீர்மானிக்கும் என கியாண்டி சொன்னார்.
Muafakat Nasional கூட்டணியிலிருந்து அம்னோ விலகிச் சென்றதும், பெர்சாத்துவும் பாஸ் கட்சியும் இணைந்து இந்த பெரிக்காத்தான் கூட்டணியை உருவாக்கின.
குறுகிய காலத்திலேயே கிட்டத்தட்ட ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு 2022 பொதுத் தேர்தலில் அக்கூட்டணி 70-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிப் பெற்றது.
தொடக்கத்திலிருந்தே பெர்சாத்துவும் முஹிடினும் தான் பெரிக்காத்தானின் முகங்கள் என்ற தோற்றம் உருவாகியுள்ள நிலையில், அந்த பிம்பத்தை உடைத்து பிரதமர் நாற்காலிக்கே பாஸ் கட்சி கனவு காண்பது அதன் அண்மைய நடவடிக்கைகளில் அப்பட்டமாகத் தெரிகிறது.