
கோலாலம்பூர், செப்டம்பர்-22,
நாடாளுமன்றத்திற்கும் மேற்கு மலேசிய மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக 16-வது பொதுத் தேர்தலை நடத்தலாம் என, DAP பொதுச் செயலாளர் அந்தோணி லோக் பரிந்துரைத்துள்ளார்.
இது ஒரு reset அதாவது பழைய முறையை மீட்டெடுத்தல் ஆகும் என்றார் அவர்.
இந்த reset சாத்தியமானால் 16-ஆவது பொதுத் தேர்தல் ஆக விரைவாக அடுத்தாண்டு இறுதியிலோ அல்லது 2027 தொடக்கத்திலோ நடைபெறலாம்; காரணம் அக்காலக்கட்டத்தில் தான் மலாக்கா-ஜோகூர் சட்டமன்றங்களின் ஐந்தாண்டு தவணைக் காலம் பூர்த்தியாகிறது.
ஆக, நாடாளுமன்றத் தேர்தலையும் தீபகற்ற மாநில சட்டமன்றத் தேர்தல்களையும் ஒரே சமயத்தில் நடத்த வசதியாக இருக்குமென்றார் அவர்.
ஏற்கனவே சபா – சரவாக் சட்டமன்றத் தேர்தல்கள் தனியாக நடக்கின்றன.
இந்நிலையில், 2022 நவம்பர் பொதுத் தேர்தலுக்கு முன்பாகவே மலாக்கா, ஜோகூர் மாநில சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடந்ததாலும், பினாங்கு, கெடா, சிலாங்கூர், கிளந்தான், திரங்கானு, நெகிரி செம்பிலான் ஆகிய 6 மாநிலங்களுக்கு பின்னர் 2023-ல் தனியே தேர்தல் நடந்ததாலும், சட்டமன்றத் தேர்தல்கள் 4 காலக்கட்டங்களாகச் சிதறியுள்ளன.
எனவே, நாடாளுமன்றத் தேர்தலையும் சட்டமன்றத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவது வாக்காளர்களுக்கு வசதியை அளிப்பதோடு, அரசின் செலவையும் குறைக்கும்.
ஆனால் இது தொடர்பான இறுதி முடிவு பிரதமரின் கையில் உள்ளது என, போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் சொன்னார்.
நாடாளுமன்றத்தின் ஐந்தாண்டு கால தவணைப்படி பார்த்தால் 16-ஆவது பொதுத் தேர்தல் 2027 கடைசிக்குள் நடைபெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சபா சட்டமன்றம் வரும் நவம்பர் 11-ஆம் தேதிக்குள் கலைக்கப்படும் என மாநில முதல்வர் டத்தோ ஸ்ரீ ஹஜிஜி நூர் தெரிவித்துள்ளார்.
அண்மைய வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 13 பேர் உயிரிழந்திருந்தாலும், தேர்தல் தாமதமடையாது என்றார்.
சபா சட்டமன்றத்திற்கு ஆகக் கடைசியாக 2020-ஆம் ஆண்டு செப்டம்பரில் தேர்தல் நடைபெற்றது.